சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலி.. வெளியானது சபாநாயகர் அறிவிப்பு.. இடைத் தேர்தல் நடக்குமா?
சென்னை: கொரோனாவால் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைந்ததையடுத்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஜூன் 10ம் தேதி, காலை உயிரிழந்தார் அவருக்கு வயது 62. 2001, 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்று மூன்று முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர் அன்பழகன்.

அன்பழகன் மறைந்தபோது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தார். தற்போது அவர் உயிரிழந்துள்ளதால் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதி காலியாக உள்ளது.
இந்த தகவலை சபாநாயகர் தனபால் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சட்டசபை தொகுதி காலியானதாக அறிவித்த பிறகு ஆறு மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. எனவே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தின் 16வது சட்டசபை தேர்தல் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்கள் கூட இல்லை. அதற்குள்ளாக ஒரு இடைத் தேர்தலை நடத்த வேண்டுமா என்று அனைத்து கட்சிகளுமே யோசிக்கும். ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு சட்டசபை தொகுதி காலியாக இருக்கக்கூடாது என்பதுதான் விதிமுறை என்றாலும்கூட, ஒரு வருடம் கூட நிறைவு பெறாத ஒரு எம்எல்ஏ பதவிக்காக தேர்தல் செலவினத்தில் ஈடுபட எந்த கட்சியும் தயாராக இருக்காது.
கொரோனா வைரஸ் காரணமாக இப்போது பொது நிகழ்ச்சிகள் எதுவும் நடப்பதில்லை. எனவே தேர்தலும் கூட நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறைவு. இதையே காரணமாக வைத்து இந்த 6 மாதம் காலக்கெடு நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறாது. அடுத்த பொதுத் தேர்தல்தான் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications