இயற்கையை போற்றத்தான் கோவில்களில் சிறப்பு மரங்கள் உள்ளன.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் மரக்கன்று நட்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு 1 லட்சத்து 30 ஆயிரத்து 60 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் தற்போது 31,194 சதுர கிமீ பரப்பளவு மட்டுமே பசுமை போர்வை உள்ளது.
1988-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய வனக் கொள்கையின்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதம், பரப்பில் பசுமை போர்வை இருக்க வேண்டும்.
இந்த இலக்கை எட்ட தமிழகம் மேலும் 13,500 சதுர கி.மீ. பரப்பளவு பசுமை போர்வையை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்காக பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, அடுத்த 10 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.

மகிழ மரம் நட்ட முதல்வர்
இதன் முதல் கட்டமாக நடப்பாண்டில் 2.50 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாற்றாங்கால்களின் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் வண்டலுார் உயிரியல் பூங்கா அருகேயுள்ள வனத்துறை இடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மகிழ மரக்கன்று நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் உரை
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், உலகம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, புல் பூண்டு தொடங்கி அனைத்து விலங்குகளுக்கும் சொந்தமானது. இயற்கையை மனிதனால் உருவாக்க முடியாது. ஆனால் அனைவரும் நினைத்தால் காப்பாற்ற, பாதுகாக்க முடியும். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த இனம் தமிழினம்.

கோயில்களில் மரங்கள்
மக்களுக்கும் மட்டுமல்லாமல், மண்ணுக்கும் மனமும் குணமும் சொன்ன இனம் நம் தமிழினம். இயற்கையை போற்ற கோவில்களில் சிறப்பு மரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இயற்கையை காப்பது என்பது நமது இயல்பிலேயே உள்ளது. வளர்ச்சியின் பெயரால் இயற்கைக்கு சோதனை வரும் போதெல்லாம், இயற்கையையும் காத்து வளர்ச்சியும் அடைந்து வருகிறோம். அரசும் ஆட்சியும் மட்டும் இயற்கையை காக்க முடியாது. மக்களும் இணைந்தால் தான் பாதுகாக்க முடியும். அந்த நோக்கத்தில் தான் பசுமை தமிழக உருவாக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம்
நமது இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் காலநிலை மாற்றம். அதிக வெயில் அடிக்கிறது. மழை என்பது சீராக இல்லாமல் உள்ளது. மழை எப்போது வரும் என்று சொல்ல முடியாத அளவிற்கு காலநிலை மாற்றம் அடைந்துள்ளது. இதனை எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும். இதற்கு காடுகளை, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மண் வளம் கெடாமல், காற்றை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும். பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பாக தட்ப வெட்ப மாற்றங்களை தாக்குபிடிக்கும் மரங்களை அதிகம் நட வேண்டும்.

மு.க.ஸ்டாலினின் பழமொழி
இந்த இயக்கத்தின் கீழ் குறுகிய காலத்தில், 2.80 கோடி நாற்றுகள் வளர்க்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் அனைவரும் ஒரு தாவரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டை பசுமை மிகு தமிழ்நாடாக மாற்ற வேண்டும். கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னர் தான், கடைசி ஆறும் நஞ்சுகளாக நிரப்பப்பட்ட பின்னர் தான், கடைசி மீனும் பிடிப்பட்ட பின்னர் தான் பணத்தை சாப்பிட முடியாது என்று உணர்வீர் என்று ஒரு பழமொழி உள்ளது. அந்த நிலை நமக்கு வரக் கூடாது. வளமோடு வாழ்வோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications