’திமுக ஆதரவாக இருக்கும்’ ராகுல் காந்தியை தொலைபேசியில் அழைத்த முதல்வர்.. ஸ்டாலின் கொடுத்த நம்பிக்கை!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது, ராகுல் காந்தியிடம், எப்போதும் திமுக உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். நாடு முழுவதும் அவரது பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

சூரத் நீதிமன்றத்தில் விசாரணை
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடி சமூகத்தை ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறி அதனை எதிர்த்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சூரத் நீதிமன்றத்தில் சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். இதன் பின்னர் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
அதேபோல் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக ஆதரவாக இருக்கும்
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் பேசியுள்ளார். அப்போது, உங்களுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று ராகுல் காந்தியிடம் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications