வந்தாச்சு புது பஸ்.. மஞ்சள் நிறத்தில்.. 100 BS6 பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: 100 புதிய BS6 ரக பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காற்றின் மாசுபாட்டை குறைக்கும் வகையில், ரூபாய் 634.99 கோடி மதிப்பில் 1666 BS6 ரக பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசின் போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ரூ.37.98 கோடி மதிப்பிலான 100 புதிய BS6 ரக பேருந்துகள் இயக்கத்தை இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மத்திய பணிமனையான பல்லவன் இல்லத்தில் இருந்து கொடியசைத்து, 100 பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1,666 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது. அதன்படி, பிஎஸ்-6 வகை குளிர்சாதனம் இல்லாத டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக 100 பேருந்துகள் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.
விழுப்புரம் போக்குவரத்து கழகம், கோயம்புத்தூர் போக்குவரத்து கழகங்களில் தலா 40 பேருந்துகள் இயங்க உள்ளன. இன்று இயங்கத் தொடங்கியுள்ள புதிய பேருந்துகளில் பேருந்துகளை முழுமையாக கண்காணிக்க ஒருங்கிணைந்த மென்பொருள் என நவீன வசதிகளோடு புதிய பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் உள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத போக்குவரத்துச் சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையை அளித்து வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை, சாதாரண நகர கட்டண பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக "விடியல் பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19.10.2022 அன்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் பேருந்து பயன்பாடு அதிகமான நிலையில், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருவதாகவும், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
மேலும், 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திற்கென மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்புகளின்படி, பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையிலும், அரசுப் போக்குவரத்து கழகங்களில் புதிய பேருந்துகளை இயக்கிடும் வகையிலும். 634.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 1666 BSVI பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும், கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 40 புதிய பேருந்துகளும். கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 புதிய பேருந்துகளும், என மொத்தம் 100 புதிய BSVI பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications