பூந்தமல்லி, திருவேற்காட்டில் வெள்ளம்.. களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. நேரில் ஆய்வு
சென்னை: பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்ததோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
Recommended Video
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடந்த சில நாட்களாவே அதிதீவிரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. குறிப்பாக திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணிர் புகுந்துள்ளது.

திருவேற்காடு
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பத்மாவதி நகரில் கூவம் நதி கரையை ஒட்டி 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், நேற்று இரவு திடீரென கூவத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது. இதையடுத்து படகுகள் மூலம் வீட்டில் இருந்தவர்களை நகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் மீட்டு அருகில் உள்ள தனியார் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைத்தனர்.

முதலமைச்சர் ஆய்வு
இந்நிலையில் இன்று காலை, திருவேற்காடு பத்மாவதி நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்தவர்களை சந்தித்து பாதிப்பு குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்
அதனை தொடர்ந்து பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட அம்மன் கோவில் தெருவில் மழை நீர் சூழ்ந்த பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், போலீஸ் குடியிருப்புகள் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர், அந்த பகுதிகளில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, மழை நீர் வெளியேற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள் குறித்து அதிகாரிளிடம் கேட்டறிந்தார்.

நடந்தே சென்ற முதலமைச்சர்
மேலும் கூவத்தை ஆய்வு செய்து விட்டு முதலமைச்சர் ஸ்டாலின் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதோடு, அந்த பகுதியில் ஒரு குழந்தைக்கு சோலா என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். முதலமைச்சரின் இந்த நிகழ்ச்சிகளில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications