சொந்த குடும்பத்தையே கைவிட்டுட்டாரு.. மோசம்.. விஜய்க்கு எதிராக திரும்பும் கிறிஸ்துவ சென்டிமென்ட்!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் 'மின்னல்' வேகத்தில் உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக), இப்போது 'மேகமூட்டம்' சூழ்ந்திருக்கிறது. 2026 தேர்தலை குறிவைத்து, குறிப்பாக சிறுபான்மையின வாக்குகளை - அதிலும் கிறிஸ்தவ மக்களின் ஆதரவை - மொத்தமாக அள்ளத் திட்டம் போட்டிருந்தார் விஜய். ஆனால், கடந்த ஒரு மாதமாக அடிக்கும் 'விவாகரத்து' செய்திகள், அவரது அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றியிருப்பதாகத் தெரிகிறது.
"குடும்பமே கோயில்..." என்றெல்லாம் திரையில் பஞ்ச் பேசி, நிஜத்திலும் 'பெர்பெக்ட் ஃபேமிலி மேன்' இமேஜை கட்டி எழுப்பியிருந்தார் விஜய். கடந்த டிசம்பரில் மகாபலிபுரத்தில் நடந்த 'சமத்துவ கிறிஸ்துமஸ்' விழாவில், பைபிள் கதைகளைக் கூறி அவர் ஆற்றிய உரை கிறிஸ்தவ மக்களிடையே ஒரு நம்பிக்கையை விதைத்தது. "திமுக-வுக்கு மாற்றாக ஒரு கிறிஸ்தவ முகம் கிடைத்துவிட்டது" எனப் பல சர்ச்சுக்கு வெளியே பேச்சு ஓடியது உண்மைதான்.

ஆனால், பிப்ரவரி இறுதியில் சங்கீதா தாக்கல் செய்த அந்த விவாகரத்து மனு, வெறும் குடும்பப் பிரச்சனையாக மட்டும் நிற்கவில்லை; அது விஜய்யின் அரசியல் அஸ்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்திருக்கிறது.
சர்ச் வாசலில் கசக்கும் அரசியல்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையின் முக்கிய தேவாலயங்களில் ஆராதனை முடிந்து வெளியே வந்த மக்களின் பேச்சு முழுக்க 'விஜய்' பற்றியதாகவே இருந்தது. வழக்கமாக அரசியல் பேசாத குடும்பப் பெண்கள்கூட, "என்னப்பா இது... 25 வருஷ கால வாழ்க்கையில இப்படி செய்யலாமா.. அதுவும் மனைவியை போய் ஒர்த் இல்லைன்னு சொல்றாரே?" என வருத்தப்பட்டதை பார்க்க முடிந்தது.
குறிப்பாக, சங்கீதாவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள 'துரோகம்' (Infidelity) மற்றும் 'மன உளைச்சல்' போன்ற வார்த்தைகள், ஒழுக்கத்தை உயரியதாகக் கருதும் கிறிஸ்தவ அமைப்புகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
"நம்பிக்கைதான் வாழ்க்கையின் அடிப்படை. தன் குடும்பத்திலேயே நம்பிக்கையைக் காப்பாற்ற முடியாதவர், நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்றுவார்?" இது சில தேவாலயக் கூட்டங்களுக்கு வெளியே கேட்ட காட்டமான குரல்.
திசை மாறும் வாக்கு வங்கி?
திமுக-வின் சிறுபான்மையின வாக்கு வங்கியில் பெரிய ஓட்டையை விழச் செய்யலாம் என்று கணக்குப் போட்ட தவெக நிர்வாகிகளுக்கு, இப்போது சொந்தக் கட்சிப் பெண்களே கேள்வி கேட்பது பெரிய நெருக்கடியைத் தந்துள்ளது.
"தனிப்பட்ட ஒழுக்கம் இல்லாத ஒருவருக்கு ஆதரவு அளிப்பது சரியாக இருக்காது" என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
சில இடங்களில் மக்கள் நேரடியாகப் பெயரைச் சொல்லாவிட்டாலும், "தலைவன் என்பவன் குடும்பத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும்" என மறைமுகமாகச் சாடியது விஜய்யின் இமேஜுக்கு விழுந்த பெரிய அடி என்கிறார்கள் வட்டாரத்தினர்
நடக்குமா 'டேமேஜ் கண்ட்ரோல்'?
ஏற்கனவே 'விஜய்-திரிஷா' விவகாரம் சமூக வலைதளங்களில் எரியும் நெருப்பாக இருக்க, சங்கீதாவின் நீதிமன்றப் புகார்கள் அதில் பெட்ரோலை ஊற்றியுள்ளன. "இது அரசியல் எதிரிகளின் சதி" என்று தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கத்தினாலும், சாதாரண மக்களிடம் - குறிப்பாக கிறிஸ்தவக் குடும்பங்களிடம் - ஏற்பட்டிருக்கும் இந்த 'நெகட்டிவ்' தாக்கத்தை மாற்ற விஜய் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
வருகிற ஏப்ரல் 20-ம் தேதி நடக்கவிருக்கும் நீதிமன்ற விசாரணை, விஜய்யின் அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்தே தீர்மானிக்கப்போகிறது என்பதே கசப்பான உண்மை!












Click it and Unblock the Notifications