சாம்சங் ஊழியர்களுக்கு ஆதரவாக போராட்டம்! அனுமதி கோரி ஹைகோர்ட்டில் சிஐடியூ மனு
சென்னை: சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்தில் அக்டோபர் 11 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சிஐடியூ தொழிற்சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் பன்னாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு,பதவி உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சிஐடியூ தொழிற்சங்கம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கடந்த செப்டம்பர் 18 ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில் காவல்துறை அனுமதி அதற்கு அனுமதி மறுத்தது.
அனுமதி வழங்கவில்லை என்பதை அறியாத தொழிலாளர் 100 பேர் வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 18 ம் தேதி திடீரென கூடியுள்ளனர். இதையறிந்து அப்பகுதிக்கு சென்ற தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்க சென்றுள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் சட்டவிரோதமாக கூடியதாக கூறி தொழிற்சங்க நிர்வாகிகளை முறையாக நடத்தாமல் அனைவரையும் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்துள்ளனர். இதை எதிர்த்து சிஐடியுவின் துணைப் பொதுசெயலாளர் திருச்செல்வம் சென்னை வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடந்த 18 ம் தேதி ஆர்ப்பாட்டத்திற்காக கூடியிருந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் அதன் தலைவர்களை முறையாக நடத்தாத சென்னை காவல் ஆணையர், நுங்கம்பாக்கம் காவல்நிலைய உதவி ஆணையர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வரும் அக்டோபர் 11ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications