விஜய்க்கு நாளை ‘அக்னிப் பரீட்சை’.. கை கொடுப்பாரா திருமா? கோட்டையை நோக்கிய பயணத்தில் ரணகள ட்விஸ்ட்!
சென்னை: தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பின் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்கப் போகிறாரா அல்லது பின்னடைவைச் சந்திக்கப் போகிறாரா என்பது நாளை தெரிந்துவிடும். விஜய் முதலமைச்சராகப் போகிறாரா இல்லையா என்பது அவர் கையில் இல்லை. முக்கியமான இந்த அரசியல் நகர்வுகளை ஒரு சுவாரசியமான தொகுப்பாக பார்க்கலாம்.
விசிக தலைவர் திருமாவளவன் எடுக்கும் முடிவு, காங்கிரஸ், விசிக வைக்கும் டிமாண்ட், ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது, அமமுகவின் புகார் என பல பிரச்சனைகள் விஜய் தலைக்கு மேல் கத்தியாக தொங்குகின்றன.

திருமாவளவன் எடுக்கும் முடிவு என்ன?
விஜய் தரப்பிற்கு இருக்கும் கடைசி மற்றும் மிக முக்கியமான நம்பிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே. அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை நாளை அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 118 என்ற மேஜிக் எண்ணை எட்ட விஜய்க்கு விசிக-வின் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மிக அவசியம்.
பிரேமலதாவாலும் உதவ இயலாது
தேமுதிகவைச் சேர்ந்த பிரேமலதா விஜயகாந்த் மட்டுமே, விஜய்க்கு ஆதரவளிக்கக்கூடிய மற்றொரு சாத்தியமான எம்.எல்.ஏவாக எஞ்சியுள்ளார். இருப்பினும், அவர் திமுக கூட்டணியிலிருந்து விலகி வந்தாலும் கூட, அவரது ஆதரவு மட்டும் விஜய்யை, ஆளுநர் எதிர்பார்க்கும் 118 இடங்கள் கொண்ட பெரும்பான்மை என்ற இலக்கை எட்ட உதவாது.
காங்கிரஸின் 'பவர்' டிமாண்ட்
ஆதரவு அளிப்பதற்கு ஈடாக காங்கிரஸ் மற்றும் விசிக ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது. தலா ஒரு துணை முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளும் கேட்கின்றன. காங்கிரஸ் கூடுதலாக இரண்டு அமைச்சர் பதவிகள் வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளதாம்.
பாதுகாப்பு வளையத்தில் காங்கிரஸ்
குதிரை பேரத்தைத் தவிர்க்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ரகசியமாக ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஐயுஎம்எல் திடீர் பல்டி
முதலில் ஆதரவு தருவதாகக் கூறிய IUML, தற்போது பின்வாங்கியுள்ளது. இதனால் விஜய்க்கு வரவேண்டிய 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு பறிபோனது.
முட்டுக்கட்டை போடும் தினகரன்
தனது கட்சி எம்.எல்.ஏ காமராஜ், விஜய்யின் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, ஆளுநரிடம் 'குதிரை பேரம்' நடப்பதாகப் புகார் அளித்து தினகரன் முட்டுக்கட்டை போட்டுள்ளார். அதிமுகவை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.
முடங்கிய பதவியேற்பு விழா பணிகள்
விஜய்யின் பதவியேற்பு விழாவுக்காகத் தயார் செய்யப்பட்ட நேரு ஸ்டேடியம் தற்போதைய நிலவரப்படி, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு நாட்களில் மூன்றாவது முறையாகப் பணிகளை நிறுத்தியுள்ளது.
சென்னைக்கு வராதீர்கள் என மெசேஜ்
ஆளுநரிடம் இருந்து பதவியேற்பு நிகழ்வுக்கான அழைப்பு வராததால், தவெக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு 'சென்னைக்கு வரவேண்டாம்' என மெசேஜ் அனுப்பி வருகின்றனராம்.
118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் அழைப்பு இல்லை என்பதில் ஆளுநர் உறுதியாக இருப்பதால், நாளை விஜய் பதவியேற்பாரா அல்லது மீண்டும் காத்திருப்பா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. திருமாவளவனின் ஒற்றை அறிவிப்பில் அடங்கியிருக்கிறது விஜய்யின் அரசியல் எதிர்காலம்! மே 9 ஆம் தேதியான நாளை விஜய்க்கு ரொம்பவே முக்கியம்.. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.













Click it and Unblock the Notifications