நெகிழ்ச்சி நொச்சிக்குப்பம்.. தமிழகத்தில் ரூ.800 கோடி திட்டப்பணியை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர்
சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற ரூ.800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.. மேலும், ரூ.1192 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.. இந்த 4 நகராட்சி பகுதிகளுடன் கூடுதலாக சில ஊராட்சி பகுதிகளையும் இணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மாநகராட்சிகள்: இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தப்படும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
மேலும், பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருமே பயன்பெறும் வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி இதன்மூலம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று துவக்கி வைக்கிறார்: இந்த புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி என 4 மாநகராட்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.. காணொலி மூலம் இதனை அவர் துவக்கி வைக்கிறார்.
அதேபோல, திருத்தணியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.. தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்வர் இதனை திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர்கள், கலெக்டர், எம்பி, எம்எல்ஏக்கள், நகரமன்றத் தலைவர் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்று திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் தெரிவித்திருக்கிறார்.
மீன் அங்காடி: இதுபோலவே, மீன் அங்காடியையும் இன்று முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார்.. ரூ.9.97 கோடி மதிப்பில், நொச்சிக்குப்பம் பகுதியில், மீனவர்கள் குடியிருப்புகளுக்கு நடுவில், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி கட்டுமானப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளதால், இன்று ஆகஸ்ட் 12-ம் தேதி மீன் அங்காடியை முதல்வர் ஸ்டாலின் திறக்க உள்ளார்.
இந்த நவீன மீன் அங்காடியில் 366 மீன் கடைகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள், மீன்களைச் சுத்தம் செய்யத் தனியாக 2 பகுதிகள், இந்த அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்த பின் வெளியேற்றும் வகையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம், 60 பைக்குகள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
திட்டப்பணிகள்: இதுபோலவே, ரூ.800 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.. நகராடசி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற ரூ.800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.. அதேபோல, ரூ.1192 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.












Click it and Unblock the Notifications