பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை மாசாணி... 3 அம்மன் கோவில்களில் இனி நாள் முழுவதும் அன்னதானம்
சென்னை: தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். பெரியபாளையம் பவானியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கோவில்களுக்கு வரும் ஏழைகள் பசியாற வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அன்னதானத்திட்டம் தொடங்கப்பட்டது 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இத்திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார், முதல் கட்டமாக 63 கோவில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு பின்னர் 7 கட்டங்களாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் விரிவுபடுத்தப்பட்டது.

கடந்த 2012-2013ஆம் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் பழனி தண்டாயுதபாணி கோவில் ஆகிய இருகோவில்களிலும் காலையில் இருந்து இரவு வரை நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாள் முழுவதும் அன்னதானத்திட்டத்தை அப்போதய முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் தொடங்கி வைததார்.
திமுக ஆட்சி கடந்த 2021ஆம் ஆண்டு அமைந்த பிறகு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருக்கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட பிரபல ஆலயங்களில் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் ஆலயம், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம், கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணிஅம்மன் ஆலயம் உள்ளிட்டவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராசன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
நாள் முழுவதும் அன்னதானம் என்ற திட்டத்தின் படி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆண்டொன்றுக்கு 9,25,600 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும், மூன்று கோடியே 65 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில் தற்பொழுது இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ள சூழலில் 5ஆயிரம் பக்தர்கள் பயனடைவார்கள் எனவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 1500 பக்தர்கள் பயனடைந்து வந்த நிலையில் இனி வரும் காலங்களில் 2800 பக்தர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் 500 பக்தர்கள் பயனடைந்து வந்த சூழலில் இனி 1800 பக்தர்கள் பயனடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
