ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலைக்கே வந்த பிரியாணி வாசம்! மேல்விஷாரம் மாஸ்டரை கூட்டி வந்த துரைமுருகன்
சென்னை: பெரிதாக ஆடம்பரங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் பழைய கஞ்சியும், பழஞ்சோறும் ருசி என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது போல் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவு ஃபேமஸ்!
திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை பன் பரோட்டா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, ஆம்பூர் பிரியாணி, ஆரணி அரிசி, பண்ருட்டி பலாப்பழம், சேலத்து மாம்பழம், நாமக்கல் முட்டை என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த ஊர்களுக்குச் சென்றால் அதை சாப்பிடாமலோ வாங்கி வராமலோ இருக்க மாட்டோம். அந்தளவுக்கு அந்த உணவு பொருட்களுக்கு ருசி உண்டு. இன்னும் சிலர் அந்த உணவுகளை எப்படி செய்வது என்று உணவை செய்யும் மாஸ்டரை கேட்டு கொண்டு வீட்டில் வந்து செய்து பார்ப்பார்கள்.
ஆயினும் அந்த பக்குவத்திற்கு வராது. காரணம், அந்தந்த ஊர் தண்ணீரில் செய்யும் போது அது அதே சுவையை தருகிறது. இந்த உணவுகளுக்கு பிரபலங்களும் "அடிமை" என்பதை மறுப்பதற்கில்லை.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் துரைமுருகன் மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த் தனது 50ஆவது பிறந்தநாளை கடந்த ஜனவரி 19ஆம் தேதி கொண்டாடினார். இந்த விழாவையொட்டி தங்கள் வீட்டில் உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொதுவாக ஆண்டுதோறும் குடும்பத்தினருடன் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடி மகிழும் கதிர் ஆனந்த், இந்த 50ஆவது பிறந்தநாளை சிறப்பாக அமைத்துக் கொள்ள விரும்பினார். இதற்காக அவர் வேலூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் இருக்கும் திமுக நிர்வாகிகளையும் அழைத்திருந்தார்.
அவர்களுடன் காட்பாட்டி வீட்டில் பிரம்மாண்டமாக பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் வந்திருந்தவர்கள் அனைவருக்கும் மட்டன் பிரியாணி அளிக்க கதிர் ஆனந்த் முடிவு செய்தார். இதையடுத்து ஆற்காட்டை சேர்ந்த தொழிலதிபரும் ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளருமான சாரதி என்பவர்தான் பிரியாணி வழங்கும் பொறுப்பை ஏற்றார்.
அந்த மட்டன் பிரியாணியை சாப்பிட்ட அனைவரும் பிரியாணி சூப்பர் என பாராட்டினர். கையை சோப்பு போட்டு கழுவினாலும் பிரியாணி வாசம் கையை விட்டு போகாமலேயே இருந்தது. திமுக முக்கிய புள்ளிகள் எல்லாம் யார் செய்த பிரியாணி என கேட்டனர்.
பிரியாணி டபராவில் ஒரு பருக்கைக் கூட இல்லாத அளவுக்கு மொத்தமும் காலியானது. அனைவரும் வயிறார சாப்பிட்டனர். என்னதான் பணத்தை வாரி இரைத்தாலும் சுவையான உணவு அளிப்போர், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்" என்பார்கள்.
இப்படி பிரியாணி பற்றி திமுக பெரும் புள்ளிகள் பேசி பேசி அந்த வாசம் ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை வந்தடைந்தது. அப்படி என்ன பிரியாணியா இருக்கும் என யோசித்த ஸ்டாலின், நேரடியாக துரைமுருகனிடமே கேட்டுவிட்டாராம்.
"நம்ம கதிர் பர்த்டேவுக்கு நீங்கள் போட்ட பிரியாணி நல்லா இருந்துச்சாமே, அதை யார் செய்தது, அப்படி அதில் என்னதான் இருந்தது" என கேட்டாராம். உடனே துரைமுருகன், "நம்ம சாரதிதான் அந்த மாஸ்டரை கூட்டி வந்தார். மேல்விஷாரம் பகுதியில் அவர் பரம்பரை பரம்பரையாக பிரியாணி செய்து வருகிறார்.
உங்களுக்கு அந்த பிரியாணி பிடித்துவிட்டதுதானே, ஒன்றும் பிரச்சினையில்லை பிப்ரவரி 2ஆம் தேதி என்னோட 53 ஆவது கல்யாண நாள். நீங்கள் திருச்சி போய்ட்டு வாங்க, திருமண நாளுக்கான பிரியாணி விருந்தை பிப்ரவரி 3ம் தேதி கோட்டூபுரத்தில் இருக்கும் என் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்" என்றாராம்.
இதையடுத்து துரைமுருகன், சாரதியிடம் விஷயத்தை சொல்லி அந்த பிரியாணி மாஸ்டரை கையோடு அழைத்து வந்துவிட்டார். அந்த மாஸ்டர் பெயர் முன்னா! இவர் 20 ஆண்டுகளாக பிரியாணி செய்து வருகிறாராம். மேல்விஷாரம் முன்னா மாஸ்டர் என்றாலே அனைவருக்கும் தெரியுமாம்.
இதையடுத்து கோட்டூபுரத்தில் கமகம பிரியாணி ரெடியானது. முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் துரைமுருகன் வீட்டிற்கு சென்றார். அங்கு முன்னா மாஸ்டரின் பிரியாணியை சுவைத்தார். அத்துடன் மீன் உள்ளிட்ட ஏராளமான ஐட்டங்கள் பரிமாறப்பட்டன. முதல்வரே முன்னா மாஸ்டரை அழைத்து வெகுவாக பாராட்டினார். இதனால் துரைமுருகனும் கதிர் ஆனந்தும் சாரதியை பாராட்டினராம். திமுக நிர்வாகிகள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு முன்னாா மாஸ்டரை புக் செய்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications