இதுதான் கருணாநிதி.. இதுதான் தமிழ்நாடு! “மருத்துவ கட்டமைப்பில் டாப்”.. பெருமை பொங்கப் பேசிய ஸ்டாலின்!
சென்னை: சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு, சுகாதார வளர்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய பணிகள் பற்றி பேசினார்.
சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு பற்றி பெருமையோடு பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "பதினைந்தே மாதத்தில் இந்த மருத்துவமனையை பிரமாண்டமாக கட்டி இருக்கிறோம். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன்.. பதினைந்தே மாதத்தில் இந்த மருத்துவமனையை கட்டி இருக்கிறோம். இதுதான் மிக முக்கியமான சாதனை.
2015ல் அறிவித்துவிட்டு 2023ஆம் ஆண்டு வரை வரை இரண்டாவது செங்கலை கூட எடுத்துவைக்காத அலட்சியத்தோடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை அப்படி இருக்க, அடிக்கல் நாட்டிய 15 மாதத்தில் நாம் இந்த மாபெரும் மருத்துவமனையை கட்டி எழுப்பி சாதித்திருக்கிறோம்.
மக்களுக்காக உண்மையான நோக்கத்தோடு திட்டங்களை தீட்டுபவர்களுக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக திட்டங்களை அறிவிப்பவர்களுக்கும் இருக்கக்கூடிய வேறுபாட்டை மக்கள் நன்கு அறிவார்கள்.
நம்மிடம் விட்டால் இதுபோன்ற மருத்துவமனையை ஆண்டுக்கு ஒன்றை நம்மால் கட்ட முடியும். அத்தகைய மருத்துவக் கட்டமைப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு. மருத்துவக் கட்டமைப்பில் நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. சென்னைக்கு மெடிக்கல் சிட்டி என்றுதான் பெயர்.

நாட்டிற்கே முன்னோடி திட்டமாக கலைஞர் காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் இலவசமாக சிகிச்சை பெற்று உயிர் பிழைக்க வழிவகுத்த மனிதநேயர் நம் நூற்றாண்டு நாயகர் கருணாநிதி.
1989ல் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரில் ஏழைப் பெண்களுக்கான மகப்பேறு நிதி உதவி திட்டத்தை தொடங்கியவர் தாயுள்ளம் கொண்ட நம் கருணாநிதி.
2015ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா குழந்தைகள் நல பெட்டக திட்டம் ஆனாலும், அதை எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இன்றி இன்றளவும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுதான் கருணாநிதி நமக்குக் காட்டிய வழி.
யார் செய்திருந்தாலும், அது மக்கள் நலன் பயக்கும் திட்டம் என்றால், அதை அரசியல் பார்வையோடு பாழாக்காமல் இன்னும் பெருமைப்படுத்துவதுதான் பேரறிஞர் அண்ணாவின் தம்பி கருணாநிதியின் பாணி.
கருணாநிதி ஆட்சிகாலத்தில் தான் விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற சிந்தனையை முதன் முதலாக விதைத்தவர் நம் கருணாநிதி.
இப்போதும் மக்களை தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 போன்ற நாட்டிற்கே பல முன்மாதிரி மருத்துவத் திட்டங்களை செயல்படுத்தும் திறன் பெற்றது தமிழ்நாடு. உலகம் முழுவதும் உள்ள சுகாதார ஆர்வலர்களை தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறோம்.
நாட்டிலேயே 36 அரசு மருத்துவக் கல்லூரிகளோடு, இந்த கல்லூரிகளில் சுமார் 5,050 எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை இடங்களோடு முதலிடத்தில் திகழ்கிறது தமிழ்நாடு. 1999ல் வருமுன் காப்போம் திட்டத்தை கருணாநிதிதான் தொடங்கினார். அந்தத் திட்டம் இன்று வரை செயல்பாட்டில் இருக்கிறது.
இந்த நிதி ஆண்டில் மட்டும் 1500 முகாம்கள் நடத்தப்பட்டு 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவையை கருணாநிதி தான் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார்.
இப்போது பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்தியும் செயல்பட்டு வருகிறது. இருசக்கர அவசர கால ஊர்தியும், நடமாடும் மருத்துவப் பெட்டகமும் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது.
ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,760 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக ஆதரவின்றி தவிக்கும் 1320 குழந்தைகளுக்கு சிறப்பு என்ரோல்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படி மக்கள் நல அரசாக, மக்களைக் காக்கும் அரசாக, கருணாநிதி வழியில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications