Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமே சீதாராம் யெச்சூரி தான்.. முதல்வர் ஸ்டாலின் சொன்ன விஷயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மறைந்த சீதாராம் யெச்சூரி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சீத்தாராம் யெச்சூரிக்கு வீரவணக்கம் செலுத்தினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமே சீதாராம் யெச்சூரி தான் எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று உடல்நலக் குறைவால் காலமானார். சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் யெச்சூரி. மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சீதாராம் யெச்சூரியின் உடலை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

mk stalin sitaram yechury cpim

சீதாராம் யெச்சூரியின் உடல், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான தலைவர்கள், இடதுசாரி அமைப்பினர், இளைஞர்கள் யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், சீதாராம் யெச்சூரி உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமைக் குழு உறுப்பினர் அசோக் தேவ்லே, சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

mk stalin sitaram yechury cpim

இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சீதாராம் யெச்சூரி புகைப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. எங்களுக்கும் சொந்தமானவர், எல்லோருக்கும் சொந்தமானவர். சமூக நீதிக்காகவும் பெண்களின் சம உரிமைக்காகவும் போராடியவர் யெச்சூரி." எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "நம்முடைய இனிய தோழர் மதிப்பிற்குரிய சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு, என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதே, நான் அமெரிக்காவில் இருந்து தொடர்ப்பு கொண்டு தொடர்ந்து அவரைப்பற்றி விசாரித்துக்கொண்டே இருந்தேன். எப்படியாவது உடல்நலம் பெற்று அவர் திரும்பிவிடுவார் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், நம் எல்லோரையும் வருத்தமடைய செய்யும் வகையில், அவர் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

திமுக சார்பில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும், கழகத்தின் துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா அவர்களும், என்னுடைய தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களும், இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி அவர்களும் நேரடியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். நான் வெளிநாட்டில் இருந்து மறுநாள்தான் சென்னை வந்து சேர்ந்தேன். அதற்குப் பிறகு நம்முடைய பாலகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் அலுவலகத்திற்கு வருகிறேன்; அவருடைய திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றேன். அதற்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.

தோழர் யெச்சூரி அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல! எங்களுக்கும் சொந்தம். அனைவருக்கும் சொந்தம். எல்லோருக்கும் சொந்தமானவராக அவர் விளங்கினார். வாழ்ந்தார். வாழ்ந்து காட்டியிருக்கிறார். எடுத்துக்காட்டியிருக்கிறார். வழிகாட்டியிருக்கிறார். இந்தியாவின் கருத்தியல் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார் என்றால் நிச்சயமாக நாம் அவரைத்தான் குறிப்பிடவேண்டும். அவரின் இழப்பு என்பது ஒரு கருத்தியலுக்கான இழப்பாக அமைந்துவிட்டது!

இந்த நேரத்தில், தோழர் சீதாராம் யெச்சூரியைப் பற்றி நான் சொல்லவேண்டும் என்று சொன்னால், என்னுடைய நினைவிற்கு வருவது நம்முடைய கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாடுதான் இப்போது என்னுடைய நினைவுக்கு வருகிறது. கலைஞர் நடத்திய அந்த செம்மொழி மாநாட்டில், தோழர் யெச்சூரி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். "தமிழ்நாட்டில் எனக்கு ஒரு பங்குண்டு" என்று தோழர் யெச்சூரி ஆற்றிய உரைதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது.

நம்முடைய தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்ததுபோல, 2015-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தோழர் சீதாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார். "நம்முன் உள்ள முக்கிய பணி, இடதுசாரிகளையும், ஜனநாயகச் சக்திகளையும் ஒருங்கிணைப்பதுதான்" என்று பேசினார். தோழர் சீதாராம் யெச்சூரி ஆற்றிய அந்த உரைக்கு கலைஞர் அவர்கள் பாராட்டினார்.

கலைஞர் மறைவிற்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இரங்கற் கூட்ட நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டமாக நடத்தினோம். அதில் ஒன்று திமுக நடத்திய "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" புகழஞ்சலிக் கூட்டம் ஒன்று. அந்த நிகழ்ச்சியில், அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். அந்த நிகழ்ச்சியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் பங்கேற்று கலைஞர் அவர்களை பற்றி போற்றி புகழ்ந்து பேசினார்.

யெச்சூரி அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டார். சென்னையில் பிறந்த அவருக்கு தமிழ் பேசத் தெரியும் என்றாலும், மற்ற மாநிலங்களில் வந்திருக்கக்கூடிய தலைவர்களுக்கு புரியாது என்று ஆங்கிலத்தில் முழுமையாக பேசினார். "சமூகநீதிக்காகவும், பெண்களுடைய சம உரிமைக்காகவும் போராடியவர் கலைஞர் என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை; கலைஞர் இல்லாமல் தமிழ்நாடு இல்லை! என்று பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசும்போது அவரின் தமிழ் மட்டும் பிரபலம் அல்ல; அவரின் நகைச்சுவை உணர்வும் ரசிக்கத்தக்கது. மாக்சிம் கார்க்கியின் தாய் காவியத்தின் மூலம் மக்களுக்கு தொடர்ந்து முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தவர் கலைஞர்" என்று அந்த புகழஞ்சலிக் கூட்டத்தில் நம்முடைய சீதாராம் யெச்சூரி உணர்வுபூர்வமாக பேசியதை என்னால் இப்போதும் நிச்சயமாக என்னால் மறக்க முடியாது.

அந்தளவுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் மீது அன்பு கொண்டவர்; பாசம் கொண்டவர். என் மீது கூட அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார். கூட்டணிப்பற்றி பேசிக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தலைவர்கள் முரண்பிடித்தாலும் அவர்தான் சரி செய்து சிரித்த முகத்துடன் முடித்துக் கொடுப்பார். அது எல்லாம் பசுமையாக நினைவிற்கு வருகிறது. அவருடைய புன்சிரிப்பையும் நம்மால் என்றைக்கும் மறக்க முடியாது. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சிரித்த முகத்தோடுதான் பேசுவார். எந்தக் கருத்தையும் சொல்வதாக இருந்தாலும் அதையும் சிரித்த முகத்தோடுதான் சொல்வார்.

இந்தியாவின் எத்தனையோ பல பிரபலமான அரசியல் தலைவர்களை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. அப்படி உருவாக்கி இருக்கக்கூடிய தலைவர்களுள் முக்கியமான தலைவர்தான் நம்முடைய யெச்சூரி அவர்கள். ஜே.என்.யு. முழுவதையும் இடதுசாரி கோட்டையாக மாற்றிய பெருமை யெச்சூரிக்குதான் உண்டு. அதனால்தான் அவரின் உடல் ஜே.என்.யு.-வில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இது அவரின் அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக தோழர் யெச்சூரி அவர்கள் எப்போதும் இளைய சமுதாயத்துக்கான வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார் என்பதையும் என்பதை நம்மால் தெளிவாக உணர முடிகிறது.

இடதுசாரி கருத்தியலை இறுதி மூச்சு வரை கடைப்பிடித்த ஜனநாயகவாதியாக வாழ்ந்தார். தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள், தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக பதவி வகித்த காலத்தில் இடதுசாரிகளின் பங்களிப்புக்குப் பின்னணியில் இருந்து பெரும் பங்காற்றியவர்.

1996-க்கு பிறகு ஒன்றியத்தில் கூட்டணி அரசுகள் உருவான காலத்தில், கூட்டணி அரசுகளை அமைப்பதில் இடதுசாரிகள் மிக மிக முக்கியப் பங்கு வகித்தார்கள். ஜனதா தளத்தின் தேவகவுடா பிரதமரானபோதும் - அதன்பிறகு ஐ.கே.குஜ்ரால் பிரதமரானபோதும் தி.மு.க. பங்கேற்ற ஐக்கிய முன்னணிக்கு இடதுசாரிகள் ஆதரவு அளித்தார்கள். அப்போது ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தின் 'படைத் தளபதியாக' செயல்பட்டவர்தான் நம்முடைய தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள்.

அன்றைக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் சீதாராம் யெச்சூரியும் கலந்து கொண்டு தன்னுடைய ஆழமான கருத்துக்களை எல்லாம் பதிவு செய்திருக்கிறார். ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கியதில் முக்கியமான காரணகர்த்தாவாக விளங்கியவர் நம்முடைய யெச்சூரி அவர்கள்.

இப்போது நாம் உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணி தோழர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டு சொன்னார், பெருமையோடு சொன்னார். இந்தியா கூட்டணி உருவாகியிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராக விளங்கியவர் நம்முடைய தோழர் யெச்சூரி அவர்கள். சில கட்சிகளோடு முரண்பாடு இருக்கலாம். ஆனால், முரண்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி அகில இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த எல்லோரும் கைகோர்த்தாக வேண்டும் என்ற உறுதியோடு இருந்து அந்த பணியை வெற்றிகரமாக நடத்தி காட்டினார். இந்தியா கூட்டணி இந்தளவுக்கு வெற்றி பெற முக்கியமான காரணகர்த்தாவாக இருந்தார் தோழர் சீதாராம் யெச்சூரி.

தோழர் சீதாராம் யெச்சூரி சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியிருக்கிறார். கட்சியின் வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். இந்துத்துவா மீதான அவரின் விமர்சனங்கள் புத்தகங்களில் வெளிப்பட்டிருக்கிறது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மோடி அரசாங்கம் - வகுப்புவாதத்தின் புதிய அலை' என்ற நூல் முக்கியமான புத்தகம்! பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கட்டவிழ்த்துவிட்ட வகுப்புவாதத்தை அந்த நூலில் தோழர் யெச்சூரி அவர்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

நாள்தோறும் தீக்கதிர் பத்திரிகை வருகிறது. அந்த தீக்கதிர் பத்திரிகையில் டைரி போல் குறிப்புகளை தொடர்ந்து எழுதி வந்தார். காரணம் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு அந்த அரசியல் தெரிந்துகொள்வதற்காகவும், புரிந்துகொள்வதற்காகவும் அதையும் அவர் தொடர்ந்து செய்து காட்டினார். தோழர் சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்றுள்ள பணிகளை எல்லாம் நாம் எல்லோரும் தொடர்ந்து தொய்வில்லாமல் தொடர வேண்டும்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், அதன் ஆளுமைகளாக வலம் வந்த தலைவர்களின் வரிசையில், தனக்கென தனி இடம் பெற்று புகழ்மிக்க தலைவராக வாழ்ந்து காட்டியிருக்கிறார் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள்.

கல்வியையும், அதன் மூலம் பயின்ற அரசியலையும் சமூக மாற்றத்துக்காக பயன்படுத்தியவர் தோழர் சீதாராம் யெச்சூரி. மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும், சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும், சமூக நீதி இந்தியாவை உருவாக்க வேண்டும். இதை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் அவர் வழியிலே நின்று பணியாற்ற வேண்டும்" என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+