உணவு அருந்தி கொண்டிருந்த தூய்மை பணியாளர்கள்! டேபிள் அருகே வந்து ஸ்டாலின் செய்த செயலால் நெகிழ்ச்சி!
சென்னை: சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவை வாங்கி சாப்பிட்டு பார்த்தார். இதனால் தூய்மை பணியாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம், குடியிருப்பு வீடுகள், பணியின் போது உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் ரூ 10 லட்சமாக உயர்த்தி வழங்குதல், சுயதொழில் தொடங்க மானியம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு ஸ்டாலின் பேசுகையில், சென்னையில் 300 சதுர அடியில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை விரைவில் கட்டித் தரப்படும்.
தன்னலம் கருதாமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களின் சேவையை அனைவரும் போற்றுவோம். தூய்மை பணியாளர்கள் செய்வது வேலையல்ல, சேவை. அவர்களைப் பாதுகாப்பது எங்கள் கடமை. 2022 ஆம் ஆண்டு தூய்மை பணியாளர்களின் மேம்பாட்டு நலனுக்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தேன்.
வரும் டிசம்பர் 6ஆம் தேதி உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். அதாவது டிசம்பர் 6ஆம் தேதி முதல் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் 3 வேளை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
மக்களும் குப்பைகளை தூக்கி வீசக் கூடாது. தரம் பிரித்துத் தர வேண்டும். 100 சதவீத ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நகர தூய்மைக்கு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும். தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத் தரம், சுய மரியாதை உயர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு ஸ்டாலின் உணவு வழங்கினார். அப்போது அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவரும் எடுத்து சாப்பிட்டு உணவு எப்படி இருக்கிறது என ஆய்வு செய்தார். இதனால் அவர்கள் நெகிழ்ந்தனர்.
மேலும் சாப்பிட்டுவிட்டுதான் வேலை பார்க்க வேண்டும். தூய்மையை போல் உங்கள் பாதுகாப்பும் முக்கியம் என அவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் பல்வேறு தருணங்களில் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தியுள்ளார். அவர்களுடன் சேர்ந்து டீக்குடித்துள்ளார். மழை, வெயில் பாராமல் பணியாற்றும் அவர்களை பாராட்டியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு சென்னையில் கொட்டும் மழையிலும் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு நன்றிச் சொல்லும் விதமாக அவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் உணவு அருந்தினார். அப்போது முதல்வர் அருகே அமர்வதற்கு தூய்மை பணியாளர் கூச்சப்பட்ட நிலையில் ஸ்டாலின் செய்த செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஜம்புலிங்கம் பிரதான சாலையில் உள்ள காமராசர் சத்திரத்தில், 600 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, ரெயின் கோட், புடவை, போர்வை, ரஸ்க், பால் பவுடர், துவரம் பருப்பு, மிளகாய்த் தூள், சமையல் எண்ணெய், லுங்கி உள்ளிட்ட 10 அத்தியாவசியப் பொருள்களை முதல்வர் வழங்கினார். பின்னர் கடந்த 2 நாட்களாக அயராது பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு பிரியாணியுடன் கூடிய மதிய உணவை அன்புடன் பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
உணவு அருந்தும் போது முதல்வருக்கு அருகே இருந்த தூய்மை பணியாளர், அவருக்கு அருகே அமர கூச்சப்பட்டு அதிக இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தார். உடனே முதல்வர், தனது இலையையும் நாற்காலியையும் நகர்த்திக் கொண்டு அந்த பெண் தூய்மை பணியாளர் அருகில் உட்கார்ந்தார். இதை கண்ட அவர் நெகிழ்ச்சி அடைந்தார். இடையிடையே முதல்வர், அந்த பெண்ணுக்கு ஏதாவது உணவு வேண்டுமா என கேட்டார். இதனால் ஸ்டாலினை அங்கிருந்த தூய்மை பணியாளர்கள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications