எந்த கொம்பனாக இருந்தாலும்! இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! வட மாநிலத்தவர் விவகாரம்! முதல்வர் அதிரடி
வட மாநிலத்தவர் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: வட மாநிலத்தவரை வைத்து அரசியல் செய்து அதன் மூலம் அரசியல் லாபமீட்டச் சிலர் முயல்வதாகச் சாடிய முதல்வர் ஸ்டாலின், யார் சட்ட ஒழுங்கை கெடுக்க முயன்றாலும்... அவர்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப. மாணிக்கம் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இதில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், திக தலைவர் வீரமணி, வைகோ, திருமாவளவன், கேஎஸ் அழகிரி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணிக்கம் நூற்றாண்டு விழா மடல் வெளியிடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பிறக்கும் போதே மாணிக்கமாகப் பிறந்தவர் சிபிஐ கட்சியின் மூத்த தலைவர் ப. மாணிக்கம்.. இப்போது நம்முடன் மற்றொரு மனிதக் குல மாணிக்கம் அய்யா நல்லகண்ணு நம்முடன் இருக்கிறார். தியாகத்தின் திருவுருவமான நல்லகண்ணு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமை. இப்படிப் பல தியாகிகளைக் கொண்டது தான் கம்யூனிஸ்ட் இயக்கம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கழகம் வளர கொள்கைகள் மட்டும் காரணமில்லை.. இதுபோன்ற தலைவர்களும் முக்கிய காரணம்

பூர்வ கால தொடர்பு
மாணிக்கத்தின் தந்தை சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். எனவே மாணிக்கத்திற்கும் எங்களுக்கும் பூர்வ கால தொடர்பு இருக்கிறது. அரசியல் பேசியதற்காக அவர் படிக்கும் போதே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு முழு நேர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். நல்லகண்ணு 8 ஆண்டுகள் சிறையில் இருந்தார். மாணிக்கம் 5.5 ஆண்டுகள் சிறையில் இருந்தார். நாட்டின் சுந்தரத்திற்கு முன்பும் பின்பும் அதன் புரட்சிகர கொள்கைக்காக இந்தியன் கம்யூனிஸ்ட் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலைமறைவாக இருந்துள்ளனர்.

கருணாநிதி
அப்போது தலைமறைவாக இருந்த காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்குத் திராவிட கழகத்தினர் அடைக்கலம் கொடுத்துள்ளனர். கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். மாணிக்கம் மறைந்தபோது நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தினார். மாணிக்கத்தின் மறைவு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி.. திமுகவுக்கும் இழப்பு என்றவர் கருணாநிதி" என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், சில நினைவுகள் பகிர்ந்து கொண்டார்.

கொள்கை யுத்தம்
தொடர்ந்து பேசிய அவர், "ஈரோட்டில் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இது அரசின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி நமது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி.. நமக்கு அடுத்து மிகப் பெரிய களம் காத்திருக்கிறது. அதுதான் நாடாளுமன்றத் தேர்தல்.. வரும் மக்களவை தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் தமிழ்நாடு மட்டும் வென்றால் போதாது.. நாடு முழுக்க நமது கூட்டணி வெல்ல வேண்டும்.. இது வெறும் தேர்தல் இல்லை.. கொள்கை யுத்தம்..

ஒன்று சேர வேண்டும்
இந்தியா முழுக்க நமது கூட்டணி வெல்ல வேண்டும்: இப்படி நாடு முழுக்க வெல்ல ஒற்றுமை கைகள் சேராமல் வெற்றி பெற முடியாது... நாட்டில் மதவாத, வகுப்புவாத, எதேச்சதிகார சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும்.. திராவிட மாடல் கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. அதேபோல மார்க்சிய கொள்கை வகுப்புகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து நடத்த வேண்டும்.. மார்க்ஸ் கொள்கை பிளவுபடுத்தும் கொள்கை என்று பேசுவோருக்குப் பதிலளிக்கும் கடமை நமக்கு இருக்கிறது

வட மாநில தொழிலாளர்கள்
சாதியின் பெயரால் மக்களைப் பிரிக்கும் சனாதன ஆதரவாளர்கள் மார்க்ஸை பிளவு வாதிகள் என்கிறார்கள்.. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை எவ்வளவு முயன்றாலும் உங்களால் உடைக்கவே முடியாது" என்றார். தொடர்ந்து வட மாநிலத்தவர் விவகாரம் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பீகார் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரைக் காக்கவே தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த கொம்பனாக இருந்தாலும்
அவர்களை வைத்து அரசியல் செய்து அதன் மூலம் அரசியல் லாபமீட்டச் சிலர் முயல்கின்றனர். அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இன்று காலை கூட நான் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் தொலைப்பேசி மூலம் பேசினேன். யார் சட்ட ஒழுங்கை கெடுக்க முயன்றாலும்... அது எந்த கொம்பனாக இருந்தாலும்.. அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடங்குவோம்" என்று அவர் பேசினார். தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் எனப் பொய்யான தகவல் பரவி வரும் நிலையில், அதற்கு முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications