தர்மபுரியில் ஸ்டாலின்.. ஊரக பகுதிகளிலும் இனி ‛மக்களுடன் முதல்வர்’ திட்டம்.. இன்று முதல் அமல்
சென்னை: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ந்து ‛மக்களுடன் முதல்வர்' எனும் திட்டத்தை ஊரக பகுதிகளில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டத்தில் நடந்த விழாவில் அவர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒரு திட்டம் தான் ‛‛மக்களுடன் முதல்வர்''.

இந்த திட்டத்தின் நோக்கம் என்பது அரசு துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களை சென்று சேர வேண்டும் என்பது தான். அதாவது இந்த திட்டத்தின் அரசு துறை சேவைகள் பெற மக்கள் மனு அளிக்கும்போது அதன் மீது உடனடியாக தீர்வு காணப்படும்.
அந்த வகையில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு ‛மக்களுடன் முதல்வர்' எனும் திட்டம் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 18 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் இன்று வரை பல லட்சம் மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். அதாவது மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
இதையடுத்து இந்த திட்டத்தை அடுத்தக்கட்டமாக விரிவுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. அதன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை தொடர்ந்து ஊரக பகுதிகளிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று ஊரக பகுதிகளுக்கான ‛மக்களுடன் முதல்வர்' என்னும் திட்டத்தை தொடங்கி வைத்து நேரடியாக மக்களிடம் மனுக்களை பெற்றார். தமிழகம் முழுவதும் உள்ள 12,500 ஊராட்சிகளில், 2,500 முகாம்கள் மூலம் 15 அரசு துறைகளின் 44 சேவைகளுக்காக பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டத்தின் சார்பில் மகளிர் பயணம் செய்யும் பழைய பஸ்களுக்கு பதிலாக 20 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இந்த விழாவுக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் சென்னையில் இருந்து தனிவிமானத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் விமான நிலையத்திற்கு 10 மணிக்கு சென்றார். . பிறகு அங்கிருந்து காரில் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் சென்று விழாவில் பங்கேற்றார். முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications