எம்.பிக்கள் உங்களை சந்தித்தும் சிக்கல் தீரல.. வெளியுறவு அமைச்சருக்கு ஸ்டாலின் மீண்டும் கடிதம்!
சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த 35 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். ராமநாதபுரம் மீனவர்கள், இலங்கை மன்னார் தெற்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சார்லஸ், சூசை, ரஞ்சன் மற்றும் அலெக்ஸ் ஆகிய 4 பேருக்குச் சொந்தமான 4 நாட்டு படகுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் அதிலிருந்த செல்வநாதன், சதீஷ், அந்தோணி, ஆரோக்கியம், அந்தோணி முத்து, கணேசன், கமல்ராஜ் உட்பட மொத்தம் 35 மீனவர்களையும் கைது செய்து புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள், (IND-TN-10-MO-1825, IND-TN-10-MO-1826, IND-TN-10-MO-1458 மற்றும் IND-TN-10-MO-1487) ஆகிய பதிவு எண்களைக் கொண்ட அவர்களது நான்கு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 9) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலையும் அளிக்கிறது.
அண்மையில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த நிலையில், மீனவர் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்த பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ, தீர்வோ ஏற்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நமது மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்களால், மீனவக் குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் மன நம்பிக்கையை குலைத்து, பெருத்த நிதி சுமையை ஏற்படுத்தி, அவர்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை கடினமாக்கி உள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது.
மேலும், கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications