"திரும்ப திரும்ப பேசறாங்க.. ஸ்டாலின் வந்ததில் இருந்தே இப்படித்தான்".. ஆளுநருக்கு கிருஷ்ணசாமி லெட்டர்
ஆளுநருக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதியுள்ளார்
சென்னை: "இந்த அரசின் தலைவரான தாங்கள், ஸ்டாலினும் அவரது சகாக்களும் ஒன்றியம் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் இப்படி" என்று ஆளுநருக்கு டாக்டர் கிருஷ்ணசாமி புகார் சொல்லி ஒரு லெட்டர் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மத்தியில் ஆளும் அரசை
"ஒன்றிய அரசு" என்று அழைக்க தொடங்கியது. அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை இப்படியேதான் சொலி வருகிறார்கள்.. அதன்படியே அரசின் அறிவிப்புகளிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது.. பாஜகவின் நயினார் நாகேந்திரன் இது தொடர்பான கேள்வியை எழுப்ப, அதற்கு முதல்வர் ஸ்டாலினும் நீண்ட நெடிய விளக்கம் தந்திருந்தார்.. ஆனாலும் அந்த வார்த்தையை பயன்படுத்த தொடர்ந்து பாஜக தரப்பு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

புகார்
இதுகுறித்து ஆளுநருக்கு புகார் சொல்லி ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.. அந்த கடிதம் இதுதான்: "தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது வேறு; இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் வேறு. இந்திய மக்கள் அனைவரும் நம் மத்திய அரசை, இந்திய மத்திய அரசு என்று அழைக்கிறார்கள்.

மைய அரசு
தமிழகத்தில் கடந்த காலத்தில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வேறு பதங்களில் அழைத்ததில்லை. நம் மத்திய அரசை, இந்திய அரசு, இந்திய மைய அரசு அல்லது இந்திய நடுவண் அரசு என்று தமிழில் அழைத்தார்கள். ஆனால், மே 7-ல் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் 'ஒன்றிய அரசு' என்று அழைக்கிறார்.

அரசியலமைப்பு
தமிழில் ஒன்றிய என்பது பஞ்சாயத்து அளவில் அழைக்கப்படும் பெயராகும். அரசியலமைப்பில் கூறப்பட்டதை மாநிலங்களின் ஒன்றியம் என்று வேண்டுமென்றே சிதைப்பதற்கு இந்த வார்த்தையை திமுக பயன்படுத்துகிறது. இதனால் இந்த வார்த்தை மத்திய அரசை இழிவுபடுத்துகிறது. அவர்கள் இந்தியா அல்லது பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்த தயாராக இல்லை. ஆனால், அவர்கள் மாநிலத்தை தமிழ்நாடு அரசு என்று அழைக்கிறார்கள்.

இறையாண்மை
தமிழக சட்டமன்றத்தின் உறுப்பினர்களும் தற்போதைய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நாட்டின் இறையாண்மைக்கு கட்டுப்படுவதற்கான உறுதிப்பாட்டுடன் பதவியேற்றனர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் தேசத்துக்கு எதிராக உள்ளது.. கடந்த 21ஆம் தேதி தாங்கள் சட்டப்பேரவையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் தாங்கள் பேசினீர்கள். ஆளுநரின் தமிழ்ப் பேச்சில், 'ஒன்றிய அரசு' என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்கள் இந்தியா என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை. இதை வேண்டுமென்றே தவிர்த்துள்ளார்கள்.

அதிர்ச்சி
தமிழ் உரையை நான் படித்தபோது 'ஒன்றிய அரசு' என்று குறிப்பிட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரையில் இந்திய தேசம் அல்லது இந்திய அரசாங்கத்திற்கு பதிலாக 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதித்தது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அரசின் தலைவரான தாங்கள், ஸ்டாலினும் அவரது சகாக்களும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

வெறுப்பு
இந்த வார்த்தை இந்திய இறையாண்மை மீதான பிடியைக் குறைத்து, தமிழ் மக்களிடையே இந்திய தேசத்திற்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்திவிடும். அனைத்து வகையான பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்றவை அனைத்தும் இந்த ஒத்த வார்த்தையுடன்தான் தொடங்குகிறது" என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications