முதல்முறையாக பெரம்பூர் வந்த விஜய்! எம்எல்ஏ அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
சென்னை: தமிழக முதல்வர் விஜய் தான் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்துள்ளார். அப்போது வழிநெடுகிலும் விஜய்க்கு தொகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து முதல்வர் விஜய் பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அலுவலகத்தில் உள்ள கொள்கை தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார் விஜய். இதையடுத்து பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். தற்போது அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் எம்எல்ஏவாக இருக்கும் முதல்வர் விஜய், மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி பெரம்பூர் தொகுதி அலுவலகம் சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 1ஆவது தெருவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பகுதியில் பெரம்பூர் சட்டசபை உறுப்பினர் ச.ஜோசப் விஜய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை சுற்றி காம்ப்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
முதல்வர் விஜய்க்காக தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் தனியாக கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டு 10 பணியாளர்கள் தினமும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அலுவலகத்தை முதல்வர் விஜய் இன்று பிற்பகல் 4 மணியளவில் திறந்து வைத்தார். சட்டசபை தேர்தலில் வென்ற பிறகு முதல் முறையாக இந்த தொகுதிக்கு விஜய் வருகை தந்தார். வழக்கமாக காரில் வரும் விஜய் இந்த முறை வாகனத்தில் வருகை தந்தார். அப்போது வரும் வழியில் பெரம்பூர் தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் முதல்வர் விஜய் எம்.எல்.ஏ அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அலுவலகத்தில் உள்ள கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினார். எம்.எல்.ஏ அலுவலகத்தில் அமர்ந்து பைல்களை பார்த்தார். முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் செங்கோட்டையன் உடன் இருந்தார். தொடர்ந்து அருகில் உள்ள இ சேவை மையத்தையும் விஜய் திறந்து வைத்தார்.
பெரம்பூர் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக செயலியையும் அவர் தொடங்கி வைக்கிறார். அதில் பொதுமக்கள் எந்த நேரத்திலும் குறைகளை தெரிவிக்கலாம். அந்த செயலிக்கு "மக்கள் சேவை தளம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் பெரம்பூர் தொகுதி மக்கள் அடிப்படைத் தேவைகளான மின்சாரம், சாலை வசதி, குடிநீர், துப்புரவு பணி, கல்வி, மருத்துவ உதவிகள், அரசு நலத்திட்டங்கள், வீட்டு வசதி உதவிகள், வேலைவாய்ப்புகள், ஆவண உதவிகளையும் நேரடியாக முதல்வரின் கவனத்திற்கே கொண்டு செல்லலாம்.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது புகாரை பதிவு செய்ததும் அடுத்த சில நொடிகளிலேயே அது பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை சென்றடையும். புகார் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதை ஏற்றுக் கொண்டதற்கான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி, புகார் அளித்தவரின் செல்போன் எண்ணுக்கு செல்லும் வகையில் அந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அளிக்கப்படும் புகார்களின் மீது குறைந்தபட்சம் 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரம், சாலை வசதி, துப்புரவு பணிகள் போன்ற பிரச்சினைகளை தீர்க்க அதிகபட்சம் 10 நாட்கள் தேவைப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தில் உள்ள ஒரு பெரிய சுவரில் தவெக அரசின் சாதனைகளை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம், சிங்கப் பெண் திட்டம் ஆகியவை விஜய் படத்துடன் இடம்பெற்றுள்ளன. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications