மத்திய அரசுடன் முக்கிய மீட்டிங்.. டேக் ஆஃப் ஆகும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்
சென்னை: கோவை மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தீவிரம் காட்டி வருகிறது.
கோவை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசால் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது கோவையுடன் புனே, கொச்சி உள்ளிட்ட பல நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. புனே, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ திட்டம் பயன்பாட்டுக்கு வந்தே சில ஆண்டுகளாகிவிட்டன.

ஆனால் கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, "மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்." என்று கூறினார். 2013 ஆம் ஆண்டே 'மெட்ரோ மேன்' என்றழைக்கப்படும் ஶ்ரீதரன் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.
இருப்பினும் அதன் பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதே அதிமுக ஆட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "கோவையில் மெட்ரோ ரயில் தொடங்கப்படும்." என்று மீண்டும் அறிவித்தார்.
அதன்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து, "கோவையில் ரூ.6,683 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்." என அறிவித்தனர். அதுவும் அறிவிப்புடனே நின்றுவிட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின், "கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்." என அறிவித்தார். மீண்டும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. கோவையில் ரூ.10,740 கோடி, மதுரையில் ரூ.11,360 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.,
அதில் கூடுதல் ஆவணங்களை வைத்து அனுப்புமாறு மத்திய அரசு கூறியது. கோவை மெட்ரோ ரயில் 39 கி.மீ தொலைவுக்கு இரண்டு லைன்களில், 32 நிலையங்களுடனும், மதுரை மெட்ரோ ரயில் 23 கி.மீ தொலைவுடன் 17 நிலையங்களுடன் அமைக்க திட்டமிட்டனர்.
தற்போது கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கை ஏற்கனவே மத்திய அரசிடம் சமர்ப்பித்துவிட்டோம்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரத் துறை முன்பு இத்திட்டம் குறித்து விவரிக்க உள்ளோம். அங்கு அதை ஆய்வு செய்துவிட்டு மத்திய அரசின் பொது முதலீட்டு வாரியத்துக்கு அனுப்புவார்கள். அதன்பிறகு மத்திய அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்." என்று கூறியுள்ளனர்.
அதனால் வரும் நாள்களில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகம் எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் திருச்சி, சேலம் மெட்ரோ ரயில் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.












Click it and Unblock the Notifications