கோவை, மதுரை மெட்ரோ.. முதல்வரிடம் வானதி வைத்த கோரிக்கை.. உடனடி பதில் தந்த அதிகாரிகள்.. சூப்பர் முடிவு
சென்னை: மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள், மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (டிபிஆர்) தேவையான கட்டாய ஆவணங்களுடன் ஓரிரு வாரங்களில் மத்திய அரசுக்கு மீண்டும் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த மாற்று திட்ட அறிக்கைகள் சென்றால் மட்டுமே திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும்.
தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில் வசதிகள் உள்ளன. முதல் கட்டத்தில் 55 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் ஓடுகிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது சென்னை மெட்ரோ ரயில் தங்கமுட்டை போடும் வாத்து போல் இருக்கிறது.. கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே சுமார் ஒரு கோடியை நெருங்கிவிட்டது பயணிகள் எண்ணிக்கை.

கட்டம் இரண்டு செயல்பாட்டிற்கு வரும் 2027ல் வரும் போது, மொத்த சென்னையும் பேருந்துகளுக்கு பதில் மெட்ரோவை விரும்ப அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தினமும் சுமார் 20 முதல் 30 லட்சம் பேர் வரையிலும் பயணிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் இந்த திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களில், மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை சென்னை மெட்ரோ நிறுவனம், தமிழக அரசின் மூலம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் ஒப்படைத்தது. இந்த திட்ட அறிக்கையின்படி, மதுரையில் திருமங்கலம் - ஒத்தக்கடை வரை, 31.93 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 27 கி.மீ., மேம்பால பாதையில், 23 மெட்ரோ ரயில் நிலையங்களும், 4.65 கி.மீ., சுரங்கப்பாதையில், மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைய உள்ளது.கோவையில், 39 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ அதிகாரிகள் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். அதாவது கோவையின் பிரதான சாலையான அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், மறுபக்கம் உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலை (சத்தி ரோடு இதுவும் அதிக நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி ) வலியம்பாளையம் பிரிவு வரையிலும், மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் மொத்தம் , 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை, 936 பக்கத்திலும், கோவை மெட்ரோ திட்ட அறிக்கை, 655 பக்கத்திலும் இருந்த நிலையில், திட்ட அறிக்கைகளை ஆய்வு செய்த மத்திய அரசு, கூடுதல் ஆவணங்களுடன் மீண்டும் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. அதாவது தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் 2 முக்கியமான அறிக்கைகள் இல்லை என்று கண்டறிந்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம், அந்த மாற்று திட்ட அறிக்கைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது. அதாவது கோவை மற்றும் மதுரை மெட்ரோ குறித்து விரிவான திட்ட அறிக்கை மற்றும் மாற்று வழிகள் குறித்த ஆய்வு அறிக்கை கேட்டிருந்தது.
மெட்ரோ ரயில் கொள்கை 2017 இன் படி, ஒரு நகரம் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான மத்திய அரசை மாநில அரசுகள் அனுமதி கோரும் போது, அதில் விரிவான இயக்கம் திட்டம் மற்றும் மாற்று பகுப்பாய்வு அறிக்கை கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த நிலையில், விடுபட்ட இந்த 2 அறிக்கைகளும் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான சாத்தியக்கூறு அறிக்கையில் (டிஎஃப்ஆர்) சேர்க்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ தெளிவுபடுத்தியது. எனினும் தமிழக அரசு மத்திய அரசிடம் ஆவணங்களை சமர்ப்பித்த போது அவை சேர்க்கப்படவில்லை. இதனால் மத்திய அரசு கூடுதல் ஆவணங்களை கேட்டது.
இதனிடையே கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன், தமிழக முதல்வர் ஸ்டாலினிடம், இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்து, தேவையான ஆவணங்களைச் சேர்த்து, மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தால், கோவைக்கு பெரும் பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட உள்ளது. அதன்படி கோவைக்கு மட்டுமின்றி, மதுரைக்கு சேர்த்து மெட்ரோ திட்ட அறிக்கையில் மத்திய அரசு கேட்ட கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, "மதுரை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் 11,360 கோடி ரூபாயிலும், கோவை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் , 10,740 கோடி ரூபாயிலும் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கை, தமிழக அரசு வாயிலாக, மத்திய அரசிடம் சமர்ப்பித்துவிட்டோம். ஆனால் அந்த திட்ட அறிக்கையில், கூடுதல் ஆவணங்களை இணைத்து அனுப்புமாறு, மத்திய அரசு கூறியிருந்தது. அதாவது மெட்ரோ மட்டும் இன்றி, லைட் மெட்ரோ, பி.ஆர்.டிஎஸ்., போன்ற பிற போக்குவரத்து திட்டங்களுக்கான விபரங்கள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போக்குவரத்து வசதிகளுக்கான ஆய்வு அறிக்கையையும் இணைத்து அனுப்பும்படி அறிவுறுத்தியது.
இந்த அறிக்கையை ஏற்கனவே நாங்கள் தயாரித்து வைத்திருந்தோம். எனவே அவற்றை நாங்கள் தற்போது சரிபார்த்து விட்டோம். எனவே இன்னும் சில வாரத்தில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு வாயிலாக, மத்திய அரசுக்கு மீண்டும் அனுப்பி வைக்க உள்ளோம். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் ஆர்வமாக இருக்கிறது. எனவே இந்த இருஊர்களுக்கும், நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படாது" என்று அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications