இதுதான் தமிழை கட்டிக் காக்கும் லட்சணமா? உங்கள் பதவி பறிக்கப்படுமா? உதயநிதிக்கு வானதி கேள்வி
சென்னை: தமிழக அரசு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து நீங்கள் துணை முதல்வரா அல்லது தமிழின எதிர்ப்பாளரா என உதயநிதி ஸ்டாலினுக்கு, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நீங்கள் துணை முதல்வரா அல்லது தமிழின எதிர்ப்பாளரா திரு. @Udhaystalin
அவர்களே?

1.நீங்கள் பங்கேற்கும் விழாவில் நமது தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடுவதைக் கூட உறுதி செய்ய தவறிய உங்களுக்கு துணை முதல்வராக நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?
2.இதுதான் நீங்கள் தமிழ் மொழியைக் கட்டிக் காக்கும் லட்சணமா?
3.தவறாகப் பாடுவது காணொளியில் தெளிவாக தெரியும் போது, செய்த தவறை மறைக்க "Technical Fault" என்று புது விதமாக முட்டுக் கொடுப்பது ஏன்?
4.ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுவிட்டது என கூறி தமிழக ஆளுநரின் மீது இனவெறி சாயத்தைப் பூசிய உங்கள் தகப்பனார், உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
5.தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப் பாடியதாக பொய்ப் புகார் கூறி ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசிடம் மல்லுக்கட்டினீர்களே, நீங்கள் பங்கேற்ற விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுள்ளதே, உங்கள் பதவி பறிக்கப்படுமா? என வானதி கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தமிழக அரசின் விழாக்கள், துறை சார்ந்த ஆலோசனை கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த நிகழ்விலும் பாடப்பட்டது. அப்போது ஒரு கட்டத்தில் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்களை மீண்டும் பாடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனால் தமிழக அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில்தான் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழ்த் தாய் வாழ்த்தை யாரும் தவறாக பாடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திடீரென மைக்கில் கோளாறு ஏற்பட்டு 2, 3 இடங்களில் அவர்கள் என்ன பாடுகிறார்கள் என யாருக்கும் கேட்காமல் போய்விட்டது. அதனால்தான் அவர்களை மீண்டும் முதலில் இருந்து பாட வைத்தோமே தவிர, அவர்கள் தவறாக பாடினார்கள் என்பதற்காக அல்ல என விளக்கி அந்த சர்ச்சைக்கு உதயநிதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அண்மையில்தான் ஆளுநர் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில் ஒரு வரியை தவிர்த்துவிட்டு பாடியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடியதற்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். ஒரு அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கெல்லாம் ஆளுநர் எப்படி பொறுப்பாளியாவார் என பாஜக நிர்வாகிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.












Click it and Unblock the Notifications