கோவை குண்டுவெடிப்பில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா கைது! யார் இந்த ராஜா?
சென்னை: கோவை தொடர் குண்டுவெடிப்பில் 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாதிக் என்கிற டெய்லர் ராஜாவை, சத்தீஸ்கரில், தமிழக போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை துப்பாக்கி முனையில் கைது செய்த போலீஸார் சென்னை அழைத்து வந்துள்ளனர்.
பிப்ரவரி 14 ஆம் தேதி, 1998ஆம் ஆண்டு பாஜக தலைவராக இருந்த எல்.கே. அத்வானி, தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவைக்கு வந்த சமயத்தில் கோவையில் 11 இடங்களில் தொடர் வெடிகுண்டுகள் நிகழ்த்தப்பட்டன.

11 இடங்களில் தொடர்ந்து 12 குண்டுகள் வெடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 58 பேர் பலியாகிவிட்டனர். 2000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோயம்புத்தூர் நகரில் 11 வெவ்வேறு இடங்களில் (சுமார் 12 கி.மீ. சுற்றளவில்) தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்தன. காந்திபுரம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம் போன்ற முக்கிய பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாயின.
இந்தக் குண்டுவெடிப்புகளை அல்-உம்மா என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.பாஷா, செயலாளர் அன்சாரி உட்பட 160-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அல்-உம்மா அமைப்பு தடை செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை 2002 மார்ச் 7 அன்று தொடங்கியது. 1,300 சாட்சிகள் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். 2007 ஏப்ரல் 10 அன்று விசாரணை முடிவடைந்தது. பாஷா உட்பட 30 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாஷா சமீபத்தில் (டிசம்பர் 2024-ல்) சிறையில் இருந்து பரோலில் வந்த நிலையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் கோவை குண்டுவெடிப்பில் 1998ஆம் ஆண்டு, அதாவது 28 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சாதிக் என்கிற டெய்லர் ராஜா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த சாதிக் என்ற டெய்லர் ராஜா (48) என்பவர் சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் இருப்பதாக தமிழக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சாதிக்கை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெய்லர் ராஜா இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். தெற்கு உக்கடத்தில் உள்ள பிலால் காலனியைச் சேர்ந்த டெய்லர் ராஜா என்கிற சாதிக் ராஜா மற்றும் ஒப்பணக்கார தெருவை் சேர்ந்த பி.முஜிபுர் ரகுமான் ஆகியோர் அல் உம்மாவின் உறுப்பினராக இருந்தனர்.
டெய்லர் ராஜா குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்பு தையல் மற்றும் எம்பிராய்டரி செய்து வந்தார். இவர் 1996ஆம் ஆண்டு நாகூரில் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். மேலும் 1996- 97ஆம் ஆண்டு கோவை மாநகரில் உள்ள ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திலும், மதுரை கரிமேடு காவல் நிலையத்திலும் இரண்டு கொலை வழக்குகளை எதிர்கொண்டார்.
1997ல், டெய்லர் ராஜா, அல்-உம்மாவின் கூட்டாளிகளுடன், கோவை நகரிலிருந்து மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்து, மதுரை மத்திய சிறையின் உதவி ஜெயிலர் ஜெயபிரகாஷைக் கொலை செய்தார்.
1998 ஆம் ஆண்டு கோவை மாநகரில் உள்ள வள்ளல் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வெடிகுண்டுகள் தயாரித்து பதுக்கி வைத்திருந்தார். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 12, 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் அல்-உமாவின் சில அமைப்புகளுக்கு இவர் வெடிகுண்டுகளை விநியோகித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications