கஞ்சா போதை! கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்.. சென்னையில் ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் மீது தாக்குதல்
சென்னை: சென்னை ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் ரயிலுக்கு காத்திருந்த பயணிகளை கஞ்சா போதையில் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்களை தேடி வருகிறார்கள்.
தலைநகர் சென்னையில் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரவி வருகின்றன. ரயில்களில் ரூட் தல பிரச்சினையுடன் கல்லூரி மாணவர்கள் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொள்வது, பட்டா கத்தியை பிளாட்பார்மில் தேய்த்து சக பயணிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பது என அடாவடி செயல்களில் சில கல்லூரி மாணவரக்ள் ஈடுபடுகிறார்கள்.

பெரும்பாலான நேரங்களில் இது போன்ற சம்பவங்களின் போது, கல்லூரி மாணவர்களை போலீசார் பிடித்தாலும் மாணவர்களின் எதிர்காலம் கருதி வழக்குப்பதிவு செய்து கடுமையாக எச்சரித்து அனுப்புகிறார்கள். ஆனாலும் கல்லூரி மாணவர்கள் சிலர் இந்த எச்சரிக்கையை காதில் போட்டுக்கொள்வது போல தெரியவில்லை. சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அடிக்கடி கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நிலையில், ரயில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் சிலர் ரயில் நிலைய பிளாட்பார்மில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகளை பிடுங்கி கையில் சுத்திக்கொண்டே செல்கின்றனர். அப்போது ரயிலுக்கு காத்திருக்கும் சில பயணிகளையும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையில் தாக்குகிறார்கள்.
ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை வயது வித்தியாசம் பாராமல், கண்மூடித்தனமாக தாக்கும் சம்பவம் பார்ப்போரை அச்சம் அடைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், பயணி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பயணிகளை நடுங்க வைக்கும் வகையில் நடந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் ஆவேசத்துடன் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.
ரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளை, கல்லூரி மாணவர்கள் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. கல்லூரிகளில் நன்கு படித்து எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க வேண்டிய வயதில் போதையின் பாதையில் சென்று இளைஞர்கள் இப்படி நிதானம் இன்றி நடந்து கொள்வது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
தவறு செய்யும் கல்லூரி மாணவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்போதுதான் மாணவர்களுக்கு அச்சம் ஏற்படும் எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications