விதிமுறைகளை மீறி ஆன்லைனில் பிரச்சாரம்..? தவெக மீது தேர்தல் ஆணையத்தில் புகார்
சென்னை: தவெகவின் ஆன்லைன் பிரச்சார அறிவிப்பை உடனடியாக நீக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்த நிலையில், தவெக பெயரில், சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வியாசர்பாடியைச் சேர்ந்த தேவசகாயம் என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள சூழலில், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு நடைபெறும் வரை பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைக்காட்சி , எஃப்.எம், வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் மற்றும் பதிவுகளை பதிவிடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இசை மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை ஈர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்த நிலையில், தவெக பெயரில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த எல். தேவசகாயம் என்பவர் தமிழக தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், 'கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தவெக கட்சி சமூக ஊடகங்களில் ஏப்ரல் 22 அன்று மிகப்பெரிய ஆன்லைன் அரசியல் பிரச்சாரம் நடைபெறும்' என்று அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, தேர்தல் நடைபெறுவதற்கு முன் அமல்படுத்தப்படும் 48 மணி நேர அமைதிக் கால விதிமுறைகளை மீறுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126-ன் படி, தேர்தலுக்கு முன்பாக 48 மணி நேரத்தில் சமூக ஊடகம், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட எந்தவொரு ஊடகத்திலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சமூக ஊடகங்கள் மற்றும் இணைய வழி பிரச்சாரங்களும் Other similar apparatus என்ற வகையில் இந்த சட்டத்தின் கீழ் வருவதாகவும், அதனால் தவெகவின் ஆன்லைன் பிரச்சார அறிவிப்பை உடனடியாக நீக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 126 (2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications