கை கொடுத்தே கவிழ்த்த வரலாறு! ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கொடுத்த 'ஷாக்' - 1971 முதல் 2026 வரை!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகித்தாலும், கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுக்கு இழைத்த துரோகங்கள் நீண்ட பட்டியலாக நீள்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் தற்போது ஆதரவு அளிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி திமுகவின் முதுகில் குத்திவிட்டதாக திமுகவினர் விமர்சித்து வரும் நிலையில் இதுவரை நடந்த கூட்டணி முறிவுகள் குறித்து பார்க்கலாம்.

1969 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த அண்ணா மறைவுக்கு பிறகு கருணாநிதி முதல்வரானார். அப்போது திமுகவில் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர் உள்ளிட்டோர் முதன்மை தலைவர்களாக இருந்தனர். காங்கிரஸ் கட்சி பெரும் பிளவை சந்தித்த நேரம்.
1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரண்டாக உடைந்தது. தமிழ்நாட்டில் சி.சுப்பிரமணியம், இந்திரா காங்கிரஸுக்கு தலைமை வகித்தார்.
காமராஜர் தலைமையில் செயல்பட்ட ஸ்தாபன காங்கிரஸ் வலிமையானதாகவும் இருந்தது. 1971 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது இந்திரா காங்கிரஸ்- திமுக இடையே கூட்டணி அமைந்தது.
அப்போது லோக்சபா தேர்தலையும் சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்பதால் தனது பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்னரே 1971 ல் முதல்வர் பதவியை கருணாநிதி ராஜினாமா செய்தார். இதையடுத்து ஒரே தேர்தல் நடந்தது.
1. 1971: இந்திராவின் ஆட்டமும் திமுக பிளவும்
1971 தேர்தலில் திமுக 24 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 10 இடங்களிலும் போட்டியிட்டன. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. 203 இடங்களில் களம் கண்ட கருணாநிதி தலைமையிலான திமுக 184 இடங்களில் வென்று சரித்திரம் படைத்தது.
இருப்பினும், மாநிலங்களில் வலுவான தலைவர்கள் உருவாவதை விரும்பாத இந்திரா காந்தி, திமுகவை உடைக்கத் திட்டமிட்டார். வருமான வரித்துறை மூலம் எம்.ஜி.ஆரை இலக்கு வைத்து, அவரை திமுகவில் கலகம் செய்யத் தூண்டினார். இதன் விளைவாக திமுக இரண்டாகப் பிளவுபட்டு அண்ணா திமுக உருவானது. இன்றைய பாஜகவின் "உறவாடி கெடுக்கும்" கொள்கைக்கு முன்னோடியே காங்கிரஸ்தான்.
2. 1977: அவசர நிலை மற்றும் ஆட்சி கலைப்பு
இந்திராவின் அவசர நிலை பிரகடனத்தை கலைஞர் கடுமையாக எதிர்த்ததால், திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1977 தேர்தலில் இந்திராவுக்கு எதிர்ப்பு அலை வீசியபோது, அவரைத் தஞ்சாவூரில் நிற்க வைப்பதாகக் கூறிவிட்டுப் பின்வாங்கிய எம்.ஜி.ஆர் மீது இந்திரா அதிருப்தியில் இருந்தார்.
அந்தத் தேர்தலில் ஜனதா கட்சி வென்றது. பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 130 இடங்களைப் பிடித்து முதன்முதலில் ஆட்சியை அமைத்தது.
3. 1980: "நேருவின் மகளே வருக" - மீண்டும் துரோகம்
ஜனதா அரசு கவிழ்ந்த பின், 1980-ல் திமுக-காங்கிரஸ் மீண்டும் இணைந்தன. "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக" என கலைஞர் வரவேற்றார். மத்தியில் இந்திரா பிரதமரானதும், எம்.ஜி.ஆரின் அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதே ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களைப் பெற்று சாதனை படைத்தாலும், அதிமுக மீண்டும் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
4. 1984 - 1991: மாறிமாறி வந்த கூட்டணிகளும் டிஸ்மிஸ்களும்
1984: இந்திரா மறைவுக்குப் பின் ராஜீவ் காந்தியுடன் அதிமுக கூட்டணி அமைத்தது.
1987: எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அதிமுக பிளவுபட, ஆட்சி மீண்டும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
1989: திமுக வென்று கலைஞர் முதல்வரானார். ஆனால், 1991-ல் காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியால் சந்திரசேகர் அரசு திமுக ஆட்சியைக் கலைத்தது. "ஆட்சியை கலைக்கும் சர்க்கார் நிலைக்குமா?" என்ற கலைஞரின் வாக்குப்படியே சந்திரசேகர் அரசு கவிழ்ந்தது.
5. 1991 - 1999: ராஜீவ் கொலை மற்றும் பிளவுகள்
1991-ல் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றது. ஆனால் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலால், 1996-ல் காங்கிரஸ் பிளவுபட்டு மூப்பனார் தலைமையில் 'தமாகா' உருவானது. தமாகா-திமுக கூட்டணி அமைத்து கலைஞர் முதல்வரானார்.
1998-ல் ஜெயின் கமிஷன் அறிக்கையைச் சாக்கிட்டு திமுக அமைச்சர்களை விலக்கச் சொல்லி ஐ.கே. குஜ்ரால் அரசை காங்கிரஸ் கவிழ்த்தது. 1999-ல் காங்கிரஸ் தங்களைக் கைவிட்டதால், வேறு வழியின்றி திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது.
2001 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் பாஜகவும் இடம் பெற்றது. அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் மூப்பனாரின் தமாகாவும் இணைந்தே இடம் பெற்றன. தமாகாவுக்கு 32, காங்கிரஸ் கட்சிக்கு 14 தொகுதிகள் கிடைத்தன. மீண்டும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைந்தது. 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரங்களைத் தொடர்ந்து பாஜக - திமுக உறவில் சலசலப்பு ஏற்பட்டது.
6. 2004 - 2013: 2ஜி நெருக்கடியும் தொகுதிப் பறிப்பும்
2004-ல் மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மலர்ந்தது. 2011 தேர்தலில் 2ஜி வழக்கைப் பயன்படுத்தி திமுகவை மிரட்டிய காங்கிரஸ், அண்ணா அறிவாலயத்தில் சோதனை நடத்திக்கொண்டே 63 தொகுதிகளைப் பிடுங்கியது. ஆனால் காங்கிரஸ் வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது. 2014-ல் ஈழத் தமிழர் விவகாரத்தில் திமுக கூட்டணியை முறித்தது.
7. 2016 - 2026: ராகுல்-ஸ்டாலின் நட்பு முதல் தற்போதைய துரோகம் வரை
கருணாநிதி மறைவுக்குப் பின் ஸ்டாலின்-ராகுல் நட்பு வலுவாக இருந்தது. 2019-ல் ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது காங்கிரஸ் தனது சுயரூபத்தைக் காட்டியது.
விஜய்யுடன் ரகசியப் பேச்சு: 2025 டிசம்பரிலேயே 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியது.
2026 தேர்தல் துரோகம்: திமுகவிடம் தொகுதிப் பங்கீட்டில் பேரம் பேசி 28 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது.
தவெக-வுக்கு ஆதரவு: தற்போது 108 இடங்களைப் பெற்றுள்ள விஜய்யின் 'தவெக' ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் சூழலில், காங்கிரஸ் "இயல்பாகவே" தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் திமுகவுடனான கூட்டணியை மீண்டும் ஒருமுறை முறித்துக் கொண்டுள்ள காங்கிரஸ், "மறுபடியும் முதுகில் குத்திவிட்டது" என திமுக தலைவர்களால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
(நன்றி: மின்னம்பலம்)












Click it and Unblock the Notifications