யானை தன் தலையில் மண்ணை.. தவெக கூட்டு.. திமுகவை விட்டு விலகும் காங்கிரஸ்? யாருக்கு பாதிப்பு தெரியுமா?
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என உறுதியாக இரு கட்சிகளின் தலைவர்கள் கூறி வந்தாலும் உள்ளுக்குள் சில உரசல்கள் இருப்பது இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் விஜய் காங்கிரஸ் இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடர்ந்து வருவதாக சொல்லப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதே தமிழக அரசியலில் மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இக்கூட்டணியின் எதிர்காலத்தைப் பற்றி விவாதங்கள் எழுந்து வந்தாலும், பீகார் தோல்விக்குப் பிறகு இந்த விவாதம் தீவிரமாகியுள்ளது.
பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, திமுகவில் சில முக்கிய தலைவர்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர். இக்கருத்து திமுகவின் உட்கட்சி விவாதம் தான் என்றாலும், அது காங்கிரஸ் வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக காங்கிரஸ் கூட்டணி
ஏற்கனவே நாடு முழுவதும் பல மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாகி வரும் சூழ்நிலையில், தமிழகத்திலும் கூட்டணி கட்சி தங்கள் முக்கியத்துவத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் அங்குள்ள தலைவர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை உறுதியாக முன்னெடுத்து வருகின்றார். தவெக அரசியல் அரங்கில் புதிய அலைகளை எழுப்பியுள்ள சூழலில், சில காங்கிரஸ் தலைவர்கள் விஜய்யுடன் கூட்டணிக்கான வாய்ப்பைப் பற்றி தங்கள் ஆதரவாளர்களிடம் பேசுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தவெக பேச்சு
குறிப்பாக கரூரில் நடந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட பெரும் துயரத்துக்குப் பிறகு, ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விஜய்யை அழைத்து பேசியதாக பரவிய செய்தி, காங்கிரஸின் இளம் தலைமுறையினரிடம் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 1980ஆம் ஆண்டு 20 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இன்று திமுக கூட்டணியில் 9 தொகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் முன்பு 63 சீட்டுகள் இருந்த காங்கிரஸ், கடந்த முறை 25 இடங்களையே பெற்றது. இதனால் திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்படுகிறோம் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸின் சில மூத்த தலைவர்களிடையே ஒலிக்கிறது.
திமுக கூட்டணி பிரிவு?
இந்த சூழலில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சில காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் ஏற்பட்ட பிரச்சனைகளால் தவெகவை அணுகலாம் என்ற தகவல்கள் வெளியாகின்றன. மறுபுறம் கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை போன்றவர்கள் திமுக ஆதரவை இழக்கக் கூடாது என்பதால் எதையும் வெளிப்படையாக பேசாமல் கவனமாக நடந்து வருகின்றனர். இந்தக் குழப்பநிலையிலேயே, காங்கிரஸ் தலைமை திடீரென நிவேதித் ஆல்வாவை தமிழக பொறுப்பாளராக நியமித்துள்ளது. சினிமா துறையுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட இவர், விஜய் அணியுடனும் நல்லுறவு வைத்திருக்கிறார் என்ற தகவல்கள் வருவதால், இது புதிய அரசியல் சமிக்ஞையாக படைக்கப்படுகிறது.
2026 தேர்தல்
திமுகவோ "காங்கிரஸ் கூட்டணி தொடரும், மாற்றமில்லை" என்ற நிலைப்பாட்டில் உறுதியாக பேசுகிறது. ஆனால் காங்கிரஸின் உள்ளகத்தில் தவெக கூட்டணிப் பேச்சு சத்தமாகிக் கொண்டே இருப்பது, 2026 தேர்தலுக்கு முன் தமிழக கூட்டணிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் செல்வதால் யாருக்கு பாதிப்பு என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையைச் சொல்லப்போனால் திமுகவை விட்டு சென்றால் காங்கிரஸ் கட்சிக்கு தான் பாதிப்பு என சொல்கின்றனர்.
காங்கிரஸ் அதிருப்தி
பிற மாநிலங்களில் காங்கிரஸ் படுமோசமான நிலையில் இருந்தாலும் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இணைந்தது மூலம் கௌரவமான எண்ணிக்கையில், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் உள்ளன. அரசியலின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி சென்றால் சீட்டுகள் கிடைக்குமா? கிடைக்காதா? என தெரியாது. ஆனால் திமுகவுடன் இருக்கும் போது நிச்சயம் ஐந்து முதல் பத்து எம்பிக்கள், 20 முதல் 25 எம்எல்ஏக்கள் வரை வரும் தேர்தலில் கிடைக்கலாம். எனவே காங்கிரஸ் தற்போது கூட்டணியை மாற்றலாம் என முடிவெடுத்தால் அது விஷப் பரிட்சையாகவே இருக்கும் என்கின்றனர்.











Click it and Unblock the Notifications