காங்கிரஸ் 28 வாங்கி என்ன பிரயோஜனம்.. 8 கூட வராது.. திமுக செய்யப் போகும் சம்பவம்! திருச்சி சூர்யா
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி 28 + 1 என தொகுதி பங்கீடு ஒப்பந்தமும் கையெழுத்து ஆகி உள்ளது. இந்த நிலையில், 'காங்கிரஸ் 28 தொகுதிகள் வாங்கி என்ன பிரயோஜனம்.. திமுக செய்யப்போகும் சம்பவத்தால் 8 சீட்டில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாது' என்று திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் திமுக - காங்கிரஸ் கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்து வருகிறது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் தவிர மற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவும் காங்கிரசும் இணைந்தே தேர்தலை சந்தித்து வந்தன.

திமுக காங்கிரஸ் கூட்டணி
அந்த வகையில் தான் இந்த சட்டமன்ற தேர்தலிலும் திமுகவும் காங்கிரசும் இணைந்து செயல்படும் வகையில், காங்கிரஸ் மேலிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே கிரிஷ் சோடங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை குழுவை அமைத்தது. ஆனால் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே கிரிஷ் சோடங்கர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றார்.
கிரிஷ் சோடங்கரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய ஐ.டி. பிரிவு பொறுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியும், ஆட்சியில் பங்கு வேண்டும் என கோரிக்கை வைக்க திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் உண்டானது. இதனால் காங்கிரஸ் விஜய்யின் தவெகவுடன் சென்று விடுமோ என்றும் பார்க்கப்பட்டது.
காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு
ஆட்சியில் பங்கு கிடையாது என ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியது, மேலும் திமுக தனது கூட்டணியில் புதிதாக தேமுதிக, ஓபிஎஸை உள்ளே சேர்த்தது என மேஜர் மூவ்களை செய்து இறுதியில் காங்கிரசுக்கு 28 + 1 தொகுதிகளை கொடுத்து தொகுதி பங்கீட்டினை நிறைவு செய்தது. இதனால் திமுக 21 கட்சிகளுடன் கூட்டணி வைத்து பலம் வாய்ந்ததாக உள்ளது.
திருச்சி சூர்யா பேச்சு
நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி இருக்கும் சூழலில், பாஜகவின் திருச்சி சூர்யா, காங்கிரஸ் 28 தொகுதிகளை பெற்றாலும் 8 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று கூறியுள்ளார். ப சிதம்பரமும், செல்வப்பெருந்தகையும் ஸ்டாலின் வீட்டில் போய் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் 25 தொகுதி மட்டுமே காங்கிரஸ் கொடுத்து இருக்கும்" என்றார்.
ஒன்இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த திருச்சி சூர்யா கூறியதாவது:- டெல்லி தலைமையை பொறுத்தவரைக்கும் தமிழகத்தில் காங்கிரஸால் எந்தெந்த தொகுதியில் வெற்றி பெற முடியும், எதில் திமுக வெற்றி பெறும் என தெரியுமா? அவர்களுக்கு 28 சீட் வேண்டும் அவ்வளவு தான்.. 28 தக்காளி.. அது அழுகி இருக்கிறதா? பூச்சி இருக்கிறதா? என்று எல்லாம் தெரியாது.
8 சீட்டில் கூட வெற்றி பெறாது
திமுக அவர்கள் கேட்ட 28 தொகுதிகளை கொடுக்கும். ஆனால் காங்கிரசால் 8 எம்.எல்.ஏ கூட வர முடியாத அளவுக்கு தான் திமுக கொடுப்பார்கள். திமுக எப்படியும் 200 தொகுதிகளை இலக்கு வைத்துள்ளது. அவங்க 118 தொகுதியில் வெற்றி பெற்றால் கூட போதும்.. அப்படி இருக்கும் போது 8 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று அது எதற்கு..
திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு காங்கிரஸ் பெற்ற 8 சீட் எதற்கு.. இஷ்டம் இருந்தால் இரு.. இல்லாட்டி போ என சொல்லிவிடுவார்கள்.. இப்போ ஒரு ராஜ்யசபா, 2028 ஆம் ஆண்டு ஒரு ராஜ்யசபா கொடுக்க இருப்பதாக சொன்னாங்க.. நான் அப்போவே சொன்னேன்.. ஸ்டாலின் ஒரு ராஜ்யசபா சீட் மட்டும் தான் கொடுப்பார் என்றேன்..
ஏமாற்றி முதுகில் குத்தும்..
சொன்னது மாதிரியே நடந்துச்சா.. ஏனென்றால் 2028 வரை காங்கிரசை கூட்டணியில் வைக்க மாட்டேன் என திமுக கருதுகிறது. 2026 தேர்தலில் விஜய்யை வைத்து காங்கிரஸ் போட்ட ஆட்டத்திற்கு, இப்போது உங்களை விஜய் உடன் போகாமல் தடுத்து வைத்துவிட்டு, முதலில் விஜய்யை காலி செய்துவிட்ட பிறகு உங்களை அடிச்சா நீங்க எங்க போவீங்க..
காங்கிரஸ் எப்படி நெஞ்சில் குத்தியதோ அதேபோல் திமுகவும் அரவணைப்பது போல் ஏமாற்றி முதுகில் குத்தும்.. தவெகவுடன் காங்கிரஸ் போயிருந்தால் எதுவும் மாறியிருக்காது.. கூட்டணியில் இருந்தால் இருங்க இல்லாட்டி போங்க என்ற மனநிலையில் தான் திமுக இருந்தது. விஜய் மோடியை இப்போதே எதிர்த்து பேசுவது இல்லை. இப்படி இருக்கும் போது அவர்களை நம்பி காங்கிரஸ் போகவில்லை. காங்கிரஸ் எதையும் யோசிக்காமல் முடிவு எடுத்ததால் அந்த கட்சி அழிந்து போய் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications