விஜயை பயமுறுத்தப் போகுது பாஜக.. ’டெல்லியின்’ டீமாக செயல்படும் சிபிஐ! கோபமான கரூர் எம்பி ஜோதிமணி
சென்னை: நடிகர் விஜய் கரூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஐ விசாரணையை வைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை பாஜக நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தமிழக அரசு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கரூர் கூட்ட நெரிசல்
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதோடு அந்த விசாரணையை கண்காணிக்க சிறப்பு குழுவையும் அமைத்து உத்தரவிட்டது. இதில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிபிஐ விசாரணையை வைத்து விஜயை பாஜக நெருக்கடிக்கு உள்ளாக்கும் வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதே கருத்தைத்தான் கூறியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்பி ஆன ஜோதிமணி.
ஜோதிமணி கருத்து
இது தொடர்பாக பேசிய அவர், "கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினர் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உள்ளது. இதுவரை சிபிஐ விசாரித்த எந்த வழக்கிலும் நியாயம் கிடைக்கவில்லை.
சிபிஐ விசாரணை
சிபிஐ விசாரணை கண்காணிப்பு குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எனக்கு சிறு நெருடல் இருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து நீதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் தமிழக அரசு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும், விசாரணையை முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது குறித்து இடைக்கால உத்தரவை பெற வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்க சிபிஐ விசாரணையை பாஜக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
பாஜக அரசியல் அழுத்தம்
இதுவரை பாஜகவின் வரலாறு அப்படித்தான் இருக்கிறது. பாஜகவின் கீழ் சிபிஐ சுதந்திரமாக செயல்பட முடியுமா என்ற நம்பிக்கையும் இல்லை. தமிழக வெற்றிக் கழகம் சிபிஐ விசாரணையை கேட்காத நிலையில் தற்போது அந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. பாஜகவை வலிமையாக தமிழக வெற்றிக் கழகத்தால் எதிர்க்க முடியுமா என தெரியவில்லை. சிபிஐ-யை வைத்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்யவில்லை. சிபிஐ-யை வைத்து தான் பாஜக அரசியல் செய்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் பாஜகவின் டீமாக உள்ளன. அதனால் தான் எங்களுக்கு அச்சமாக இருக்கிறது" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications