"அதனை அவன்கண் விடல்".. புதிய தலைமைச் செயலாளருக்கு ஒரே "குறளில்" வாழ்த்து சொன்ன காங்கிரஸ், விசிக
சென்னை: தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முருகானந்தம் ஐஏஎஸ்-க்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி ஆகியோர் " இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி ஒருசேர வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஏபி முத்துசாமி, தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் ஏபி முத்துசாமியை தலைமைச் செயலாளராக நியமித்தார். தற்போது கருணாநிதி மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகானந்தம் ஐஏஎஸ்ஐ தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக திரு.முருகானந்தம் ஐ.ஏ.எஸ். அவர்கள் இன்று பொறுப்பேற்றுள்ளார். அவரது பணியில் சிறக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'அதனை அவன்கண் விடல்' என்ற வள்ளுவனின் வாக்குக்கேற்ப அதிகாரிகளின் திறமைகளை ஆராய்ந்து அவர்களுக்கு தக்க பொறுப்பு கொடுத்து மக்கள் பணியாற்றுவதற்கு தேர்ந்தெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் வாழ்த்துச் செய்தி: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக திரு முகானந்தம் IAS அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து அக்கறை கொண்டவர். விழுப்புரம் மாவட்டத்தில் மினி டைடல் பார்க் அமைவதற்கும், சிப்காட் அமைவதற்கும் தனிக் கவனம் எடுத்துக்கொண்டவர். சமூகநீதி, சமத்துவம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களை செயல்படுத்துவதில் உறுதிகொண்டவர். அவருக்கு என் வாழ்த்துகள்!
" இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்ற குறளுக்கேற்ப திரு முருகானந்தம் IAS அவர்களைத் தலைமைச் செயலாளராகத் தேர்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி !












Click it and Unblock the Notifications