சொந்த ஊர் போயிட்டு சென்னை திரும்ப போறீங்களா? இதை கண்டிப்பா படிங்க.. ஷாக் கொடுத்த ஆம்னி பஸ்கள்
சென்னை: தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில், விடுமுறை முடிந்து நாளை சென்னை திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர். ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்து இருப்பது பயணிகளை ஷாக் ஆக வைத்துள்ளது.
பணி நிமித்தமாகவும், கல்வி உள்பட பல்வேறு தேவைகளுக்காகவும் தலைநகர் சென்னையில் வெளி மாவட்ட மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், வழக்கமாவே வார இறுதிநாட்களில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பேருந்து ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இது ஒருபக்கம் இருக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அதேபோல், 28 ஆம் தேதி மிலாடி நபி விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுகிழமை வார இறுதி நாள் விடுமுறை அதோடு திங்கள் கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கினர்.
இதனால், வழக்கம் போல பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது. தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்கியது. எனினும், அதிலும் டிக்கெட் விரைவாக புக்கிங் ஆனதால், மக்கள் தனியார் ஆம்னி பஸ்களை நாடி சென்றதை காண முடிந்தது. ஆனால், ஆம்னி பஸ்களில் கட்டணம் பயணிகளின் தலை சுற்ற வைத்தது. சென்னையில் இருந்து மதுரை, நெல்லைக்கு 3 ஆயிரம் வரையிலும் டிக்கெட் கட்டணம் இருந்ததாக பயணிகள் ஆதங்கத்துடன் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், தொடர் விடுமுறை நாளை முடிவதால், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில் டிக்கெட்டுகள் பெரும்பாலானவை புக் ஆகிவிட்டன. அதேபோல், ரயில்களிலும் டிக்கெட் எதுவும் இல்லை. ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் வழக்கம் போல பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ரெட் பஸ் போன்ற புக்கிங் ஆப்களில் நெல்லையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக டிக்கெட் கட்டணம் ரூ.4,500 வரை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக பயணிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
திருச்சி, கோவியில் இருந்து 3 ஆயிரம் வரையிலும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. மதுரைக்கு 4, 800 வரையிலும் டிக்கெட் கட்டணம் உள்ளது. ஆம்னி பஸ்களின் கட்டணம் வழக்கத்தை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அரசு கூடுதல் பேருந்தை இயக்கினாலும் அது போதுமானதாக இல்லை என்றும் ரயில்களிலும் முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் நிற்க கூட முடியாத அளவுக்கு கடுமையான கூட்டம் இருக்கும் என்பதால் வேறு வழியின்றி ஆம்னி பஸ்களையே நாட வேண்டியுள்ளது.
ஆனால், இதுதான் சமயம் என்பது போல ஆம்னி பஸ்கள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை லாபம் அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஆம்னி பஸ்களின் இந்த கட்டண உயர்வை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications