தவறிய திராவிடம்..வெறுப்பை கக்கினால் தமிழ் நெருப்பை கக்கும்..கமல் அட்டாக்! உதயநிதி சொன்னதுதான் டாப்!
சென்னை: சென்னை டிடி தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வரி விட்டுவிட்டு பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டமும், டிடி தொலைக்காட்சியின் தங்க ஆண்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது பாடலை பாடியவர்கள் திக்கித் திணறி பாடியதோடு, ”தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகளை விட்டுவிட்டு பாடினர். இந்த வீடியோ வெளியான நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்தது. திட்டமிட்டு ஆளுநர் நிகழ்ச்சியில் திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பாடியதாக புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்,” திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என கூறியிருந்தார்.
”ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் கடும் எதிர்வினையாற்றி இருந்தார்.
இந்நிலையில் ’திராவிடம்’ இல்லாமல் தமிழ்த் தாய் பாடப்பட்ட சம்பவத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,”முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்தை நடைமுறைப்படுத்திய போது, குறிப்பிட்ட பிரிவினரின் மனம் புண்படாத வண்ணம் சில வரிகளை நீக்கினார்கள். ஆனால் இன்றைக்கு, ஆளுநர் பங்கேற்போடு நடைபெற்ற 'டிடி தமிழ்’ இந்திக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடே கொதித்தெழும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து 'திராவிடநல் திருநாடு’ எனும் வரியை நீக்கியிருக்கிறார்கள்.

யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது #திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே இச்சம்பவம்! சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் 'திராவிடம்’ வீழாது! இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, 'கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும்!” என கூறியுள்ளார்.
இதே போல் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,”திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது.

அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்! எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications