எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் குறைவதற்கு பதில் வேகம் எடுத்த கொரோனா.. 5 பகீர் காரணங்கள்!
சென்னை: தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா வேகம் குறைவதற்கு பதிலாக கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. மற்ற மாவட்டங்களில் கொரோனா வேகம் குறைய தொடங்கி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவிலிருந்து 94 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 94 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 43 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டது. இதனால் சென்னையில் 495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது
இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் முதல் காரணமாக, மக்கள் சரியாக தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்பதுதான். ஆம், தமிழகம் முழுக்க ஊரடங்கு கடுமையாக அமலில் இருக்கிறது. ஆனாலும் சென்னையில் மக்கள் தினமும் வெளியே சென்று வந்தனர். ஊரடங்கை மக்கள் சரியாக கடைபிடிக்கவில்லை என்ற புகார் உள்ளது. பாடி மேம்பாலம் தொடங்கி பல இடங்களில் ஊரடங்கு காலத்தில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

காரணம் 2 என்ன?
மக்கள் அதிக அளவில் வெளியே சென்று வந்ததுதான் இப்படி கொரோனா அதிகமாக பரவ காரணம் என்று கூறுகிறார்கள். அதேபோல் சென்னையில் ஹாட் ஸ்பாட் பகுதிகள் என்று அழைக்கப்படும் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தில் கூட சரியாக ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. மக்கள் தொடர்ந்து இங்கே வெளியே நடமாடுவது வழக்கமாக இருந்தது. இதனால் இங்கே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

முக்கியமான மூன்றாவது காரணம்
அதேபோல் சென்னையில் புதிதாக பெரிய ஹாட் ஸ்பாட் எதுவும் உருவாகவில்லை.மாறாக இதற்கு முன் இருக்கும் ஹாட் ஸ்பாட்களில்தான் அதிக அளவில் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் நமது கண்டெயின்மெண்ட் பிளான் தோல்வி அடைந்துவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. பொதுவாக கொரோனா ஒரு இடத்தில் தாக்கப்பட்டு அந்த இடத்தில் பலருக்கு கொரோனா பரவினால் உடனே அந்த இடத்தில் கண்டெயின்மெண்ட் பிளான் கொண்டு வரப்படும்.

கன்டெய்ன்மெண்ட் சோன் அமைப்பார்கள்
கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு ஏரியாவில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் வீட்டை சுற்றி 5 கிமீ பகுதிக்கு கன்டெய்ன்மெண்ட் சோன் அமைப்பார்கள். இதை தமிழில் கட்டுப்பாட்டு பகுதி என்று அழைக்கலாம். இந்த 5 கிமீ பகுதிக்குள் அதிகாரிகள் மொத்தமாக களமிறக்கப்பட்டு வீடு வீடாக செல்வார்கள். எல்லா வீட்டிலும் யாருக்கு எல்லாம் காய்ச்சல் உள்ளது, யாருக்கு எல்லாம் கொரோனா அறிகுறி உள்ளது என்று பார்ப்பார்கள். அதோடு அவர்கள் இருக்கும் பகுதியை சுற்றி 8 கிமீ பகுதிக்கு பஃபர் சோன் அமைப்பார்கள்.

சரியாக அமைக்கப்படவில்லை
இப்படி பஃபர் அமைக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. அங்கு சாலைகள், அத்தியாவசிய கடைகள் எல்லாம் அடைக்கப்படும். ஆனால் சென்னையில் இப்படி பஃபர் அமைக்கப்படவில்லை. மக்கள் எப்போதும் போல வெளியே அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே சென்று வந்தனர். அதேபோல் கன்டெய்ன்மெண்ட் சோன் பகுதிகளில் 21 நாட்களுக்கு பிறகு கூட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறைவதற்கு பதில் அதிகரித்தது
இதனால் என்னதான் கன்டெய்ன்மெண்ட் சோன் அமைத்து வீடு வீடாக சென்று கொரோனா சோதனை செய்தாலும் கூட தொடர்ந்து விடாமல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவும் வேகம் குறைந்துள்ளது. ஆனால் சென்னையில் கொரோனா வேகம் அதிகரித்துள்ளது. முன்பு ஒருநாளுக்கு 10 என்ற விகிதத்தில் சென்னையில் கொரோனா பரவியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தினமும் 30 என்ற விகிதத்தில் சராசரியாக ஒருநாளுக்கு கொரோனா பரவுகிறது.

காரணம் 4 என்ன?
ஊரடங்கிற்கு பின் கொரோனா குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது சென்னையில் மட்டும்தான். இதற்கு சரியான காண்டாக்ட் டிரேசின் செய்யப்படாததுதான் காரணம் என்று கூறுகிறார்கள். சரியாக காண்டாக்ட் டிரேசிங் செய்ய முடியாத காரணத்தால் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வேகமாக கொரோனா பரவுகிறது. மற்ற மாவட்டங்களில் இந்த காண்டாக்ட் டிரேசிங் மிக சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாவது காரணம்
சென்னையில் இப்படி காண்டாக்ட் டிரேசிங் செய்ய முடியாமல் போனதற்கு அதிக மக்கள் தொகையும் ஒரு காரணம் ஆகும். மிக சிறிய சென்னைக்குள் கிட்டத்தட்ட 1 கோடி பேர் வரை தற்போது வசிக்கிறார்கள். இதனால்தான் அங்கு சரியாக காண்டாக்ட் டிரேசிங் செய்வதோ, கண்டெயின்மெண்ட் பகுதி அமைப்பதோ பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. தமிழகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக செய்யப்பட்ட எந்த விதமான பணியும் சென்னையில் பெரிய அளவில் உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications