257 பேரை கண்டுபிடித்துள்ளோம்.. தமிழகத்தில் ஸ்டேஜ் 3 பரவலா? விஜயபாஸ்கர் கொடுத்த கொரோனா அப்டேட்!
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரும் உடல் நலம் முன்னேறி வருகிறார்கள்
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரும் உடல் நலம் முன்னேறி வருகிறார்கள். இவர்கள் தொடர்பு கொண்ட 257 பேரை தமிழக அரசு கண்டுபிடித்து சோதனை செய்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் சோதனைகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 3 பேர் பாதித்து அதில் ஒருவர் குணப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் தமிழகத்தில் 1780 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனாவால் பிற மாநிலங்களிலிருந்து வாகனங்கள் தமிழகத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 31 வரை தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்ன சொன்னார்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறோம். எல்லா துறைகளையும் களமிறக்கி பணியாற்றி வருகிறோம். போக்குவரத்து துறை, ரயில்வேத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை என்று எல்லா துறைகளும் ஒன்றாக சேர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இரண்டாவது கேஸ்
தமிழகத்தில் இரண்டாவது கேஸ் டெல்லியில் இருந்து வந்தவருக்கு ஏற்பட்டுள்ளது.இவர் தொடர்பு கொண்ட 163 பேரை கண்டுபிடித்து இருக்கிறோம். அதேபோல் மூன்றாவது நபர் அயர்லாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்தார். அவர் தொடர்பு கொண்ட 94 பேர் தமிழகத்தில் கண்டுபிடித்து இருக்கிறோம். தமிழகத்தில் தற்போது கம்யூனிட்டி ஸ்ப்ரெட் இல்லை. தமிழ்கத்தில் ஸ்டேஜ் 3 வகை பரவல் இன்னும் உண்டாகவில்லை.

பயப்பட வேண்டாம்
அதனால் யாரும் பயப்பட வேண்டாம்.தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையம் 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ஏற்கனவே சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி, சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது. மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் எளிதாக சோதனைகள் செய்ய முடியும்.

அறிகுறி
கொரோனா அறிகுறிகள் தென்படுவோரை அழைத்து வருவதற்கு பிரத்யேக ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்காக 100 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக செயல்படுகிறது. அதில் 25-28 டிரிப்கள் தினமும் நடக்கிறது. அதில் வேறு நோயாளிகளை ஏற்ற மாட்டோம். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தினமும் 120 வெளி நோயாளிகள் வரை வந்து சோதனை செய்துவிட்டு போகிறார்கள்

உதவி எண்
104 உதவி எண்ணில், கொரோனா குறித்த சந்தேகங்களை கேட்டு 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. பலருக்கும் சந்தேகங்களை விளக்கி வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் மக்கள் வெளியே சுற்றி வருகிறோம். மக்கள் வெளியே செல்வதை நிறுத்த வேண்டும். பொதுமக்கள் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழக்கமான விடுமுறையாக கருதக்கூடாது, என்று விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகம் எப்படி
தமிழகத்தில் ஸ்டேஜ் 3 கொரோனா பரவல் இல்லை என்று அவர் கூறியுள்ளார். கொரோனாவின் மூன்றாவது வகை பரவல்தான் ஸ்டேஜ் 3 ஆகும். இது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்க கூடியது. வெளிநாட்டில் இருந்து கொரோனா உள்ள ஒருவர் இந்தியா வந்து அவர் மூலம் தமிழகத்தில் அவரின் உறவினருக்கு வைரஸ் ஏற்பட்டு அதன்பின், அந்த உறவினர் மூலம் வேறு பலருக்கு வைரஸ் பரவினால் அது மூன்றாவது ஸ்டேஜ் ஆகும். அதாவது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு, இன்னொருவரிடம் இருந்து மற்றவருக்கு என்று பரவினால் அது ஸ்டேஜ் 3. இதை community transmission என்று கூறுவார்கள்.












Click it and Unblock the Notifications