வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் கொண்டு போக அனுமதி இல்லை.. சோதனையில் ஊழியர்கள்
சென்னை: லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படும் நிலையில், வாக்கு எண்ணும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் குழுமியுள்ளனர். வாக்குச்சாவடி முகவர்கள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட 18வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னிலை நிலவரம் காலை 9 மணி முதல் வெளியாகும். யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 64.20 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. 441 தொகுதிகளில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகள் சில மாநிலங்களில் கூட்டணியிலும், சில மாநிலங்களில் எதிர் எதிர் அணியிலும் களம் காண்கின்றன.
மத்தியில் ஆட்சியமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஒட்டுமொத்த நாடும் எதிர்நோக்கும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணிக்கு எண்ணப்படும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை 9 மணி அளவில் வெளியாகும்.
இந்தியாவை ஆளப்போவது யார் என்பது பிற்பகலுக்குள் ஓரளவு தெரிந்துவிடும். முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, மின்னணு இயந்திரங்கள் மீண்டும் பாதுகாப்பு அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) கொண்டு செல்லப்பட்டு, அங்கு 45 நாட்கள் பாதுகாக்கப்படும். 6 மாதங்களுக்கு பிறகு, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு, அவை மீண்டும் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்படும்.
பொதுவாக ஒரு மக்களவை தொகுதிக்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணிக்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்படும். ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்காக 7 மேஜைகளும், சட்டப்பேரவை தேர்தலுக்காக 7 மேஜைகளும் ஒதுக்கப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் அதிகாலை 5 மணிக்கே வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்துவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கான அறைகளை அந்தந்த தொகுதிகளுக்கான தேர்தல் அதிகாரி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒவ்வொரு மேஜையிலும் வாக்குகள் எண்ணப்படுவது வீடியோவில் முழுமையாக பதிவு செய்யப்படும்.
சென்னையை பொறுத்தவரை வடசென்னை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்பட உள்ளது.
இந்த மையங்களில் காலை 5.30 மணி முதலே அலுவலர்கள், கட்சி முகவர்கள் வரத் தொடங்கினர். அலுவலர்கள், சோதனைக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சின்னங்கள், கட்சி கரை துண்டுகளை மையங்களுக்குள் கொண்டு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்குள் வாக்குச்சாவடி முகவர்கள் செல்போன், ஐ பேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்கள் பேனா, பென்சில், பேப்பர், குறிப்பு அட்டை, 17சி ஃபார்ம் நகல் ஆகியவற்றை கொண்டு செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சோதனைக்குப் பிறகே வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications