ஆசிரியர் தேர்வில்.. தமிழ் கட்டாயம்! மொழி சிறுபான்மையினருக்கு விலக்கா? நீதிமன்றம் சொன்னது இதுதான்!
சென்னை: பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விலக்களிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில் இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் அரசு துறைகளில் சமீபகாலமாக வெளி மாநிலத்தவர்கள்தான் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள் என்று தொடர் புகார்கள் எழுந்தன. தமிழ்நாட்டின் வேலைகள் அனைத்தும் தமிழர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பல வலியுறுத்தி இருந்தன. இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறும் நபர்கள் தமிழ் மொழியில் போதுமான அளவு அறிவை கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதாவது, தமிழ்நாட்டின் பணிகள் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்யும் விதமான இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதா கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி தமிழ்நாடு அரசு நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் கட்டாயம். தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் உள்ளிட்ட தேர்வுகளில் ஆங்கிலம் மட்டும் நீக்கப்பட்டு பொது தமிழ் தாள் மட்டும் மதிப்பீட்டு தேர்வாக கணக்கில் கொள்ளப்படும். தமிழ் மொழித் தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் 10ம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கட்டாய தமிழ் தாளில் குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்றிருந்தால்தான் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். இந்த தேர்ச்சிக்கு பின்னர்தான் இதர தேர்வு தாளின் மதிப்பீடு செய்யப்படும். அதேபோல தமிழில் போதிய புலமை இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்று பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்று சட்டம் திருத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான தமிழ் கட்டாய தேர்வு கடந்த ஜனவரி 4ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புயல் மழை காரணமாக தேர்வு பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்தவில் மொழி சிறுபான்மையினருக்கு, கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என சிலர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மொழி சிறுபான்மையினருக்கு கட்டாய தமிழ் மொழி தேர்விலிருந்து விலக்களிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்தால் அது தேர்வைதான் பாதிக்கும் என்றும், எனவே மனுதாரர்களின் கோரிக்கையை அரசுதான் பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications