ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு! ஆர்.கே.சுரேஷின் முடக்கப்பட்ட வங்கி கணக்கை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்கும்படி, நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே. சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, ஆர்.கே.சுரேசுக்கு சொந்தமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

இதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையின் போது ஆர்.கே.சுரேஷ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, ஆருத்ரா மோசடி விவகாரத்திற்கும் மனுதாரருக்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்தார். மேலும், வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளவதாகவும் கூறினார்.
வங்கி கணக்கு முடக்கத்தை ரத்து செய்வதற்கு பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம், ஏழு வங்கி கணக்குகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் என ஏழு லட்சம் ரூபாயை இரண்டு வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்.கே.சுரேஷ்க்கு சொந்தமான முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க உத்தரவிட்டது.
பின்னணி என்ன?:
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.30,000 வட்டி தருகிறோம் என்கிற கவர்ச்சிகரமான விளம்பரத்துடன் மக்களிடம் திடீர் பேமஸ் ஆன நிறுவனம்தான் ஆருத்ரா கோல்டு. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு வேலூர், திருவண்ணாமலை என தமிழகம் முழுவதும் சுமார் 20 இடங்களில் கிளை பரப்பி இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. பிரச்சனை வெடிக்கும் வரை இந்த நிறுவனத்தின் உண்மை முகத்தை மக்கள் அறிந்திருக்கவில்லை.
அதாவது இந்நிறுவனம் 1.09 லட்சம் மக்களிடம் தலா 1 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.2,438 கோடியை வசூலித்திருந்திருந்தது. ஒரு மாதம் மட்டுமே வட்டி கொடுக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு மொத்தமாக நாமம் போட்டுவிட்டு பறந்து சென்றது இந்த நிறுவனம். நிறுவனத்தின் மீது மக்கள் புகார் அளித்த பிறகுதான் விஷயம் வெளியில் வந்தது. தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய மோசடிகளில் இதுவும் ஒன்றாக பேசப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளில் இறங்கியது.
பாஜக புள்ளிகள்:
இதில் கைதானவர்களில் குறிப்பிட்ட சிலர் பாஜகவில் நிர்வாகிகளாக இருந்தனர். இதில் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் முக்கியமானவர். பாஜகவின் ஒபிசி அணியின் மாநில துணை தலைவராக இருந்த இவரின் பெயர் ஆருத்ரா கோல்டு மோசடியில் அடிபட்டது. ஆனால் அந்த சமயம் அவர் இந்தியாவில் இல்லை. துபாயிலிருந்து தமிழகம் வந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையின் அடிப்படையில் அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கில் தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications