மாணவர்களுக்கு ஊட்டச்சத்தாக முட்டை கொடுக்கலாமே - அரசு பதில் தர ஹைகோர்ட் உத்தரவு
ஊட்டச்சத்தாக முட்டை வழங்கப்பட்டால் 48 லட்சத்து 46 ஆயிரம் மாணவ மாணவிகள் பயனைடைவார்கள், முட்டை உற்பத்தியாளர்களுக்கும் உதவியாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
சென்னை: கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்தாக முட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் இதனால் 48 லட்சத்து 46 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் முட்டை உற்பத்தியாளர்களுக்கும் அது உதவியாக இருக்கும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முட்டை வழங்குவது தொடர்பாக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து உரிய பதிலை வருகிற திங்கட்கிழமை அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.சுதா தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கொரோனா தொற்று காரணமாக தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறமுடியாத சூழல் இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குடும்பங்களில் அரசு தரும் ஆயிரம் ரூபாயை நம்பியே வாழ்வாதாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். எனவே குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை வழங்குவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை உள்ளிட்ட உணவுகள் வழங்குவதற்கு அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா என்பது குறித்து உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.
வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முட்டை வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும் மேலும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்க முடியாது என்றும் அம்மா உணவகங்களில் முட்டை வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு ஊட்டச்சத்தாக முட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் இதனால் 48 லட்சத்து 46 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் அதேபோல முட்டை உற்பத்தியாளர்கள் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். முட்டை வழங்குவது தொடர்பாக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து உரிய பதிலை வருகிற திங்கட்கிழமை அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.











Click it and Unblock the Notifications