கடலூரில் கவரிங் நகைகள் செய்த மாயம்.. 35 கிலோ 1115 செயின்கள்.. அடமானத்தில் 12 கிராம் தங்க நகை! எப்படி
சென்னை: தங்க நகைகளுக்கு போட்டியாக கவரிங் நகைகள் திருடப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், கொள்ளை சம்பவங்களும் பெருகி கொண்டிருக்கின்றன.. ஆனால், நாளுக்கு நாள் கவரிங் நகைகள் திருட்டு வழக்குகளும் பதிவாகி வருவது பொதுமக்களை கவலைக்குள்ளாக்கி வருகிறது.. என்ன நடந்தது?
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன், சிதம்பரம் நகரில் உள்ள ஒரு கவரிங் நகை கடையில் வேலை செய்கிறார்.

நேற்று முன்தினம் இரவு, பைக்கில் 3 லட்சம் மதிப்புள்ள, 35 கிலோ எடை கொண்ட 1,115 செயின்கள் கவரிங் நகைகளுடன் வாகனம் ஓட்டி சென்றுள்ளார்.. அப்போது வஉசி தெருவில் உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்த உள்ளே சென்றார்.
1,115 செயின்கள் கவரிங் நகைகள்
அப்போது, பாரில் இருந்து வெளியே வந்த மர்மநபர் ஒருவர், நீண்ட நேரம் காத்திருந்து, சௌந்தராஜனின் பைக்கில் உள்ள நகைகளை அட்டைப் பெட்டியுடன் எடுத்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார்.. சிறிது நேரத்தில் வெளியில் வந்த சௌந்தர்ராஜன், நகைகள் காணாமல் போனதை அறிந்து பதறி தேடி பார்த்தார்.. ஆனால் திருடியவர் எங்கும் காணப்படவில்லை.
சௌந்தராஜன் பாரில் திரும்பி, பார் ஊழியர்களிடம் சம்பவத்தை தெரிவித்தார். அவர்கள் பாரில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான், திருட்டில் ஈடுபட்டவர் ஒரு பார் ஊழியர் போல தோன்றும் மர்ம நபர் என்று உறுதி செய்யப்பட்டது.
கடலூர் அட்டை பெட்டியுடன் நகைகள்
இதன்படி, சௌந்தராஜன் சிசிடிவி பதிவை சிதம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் சமர்பித்து, திருடப்பட்ட நகைகளை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரணை ஆரம்பித்துள்ளனர். மதுக்கடையில் மது போதையில் இருந்த கூலித் தொழிலாளிதான் அந்த கவரிங் நகைகளை அட்டைப் பெட்டியுடன் திருடி சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட நகைகளின் மதிப்பு கிட்டத்தட்ட 5 லட்சம் வரை இருக்குமாம்.. மொத்தம் 35 கிலோ எடை கொண்ட கவரிங் நகைகள் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடு போயிருப்பது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12 கிராம் போலி தங்கம் நகை
அதேபோல நேற்றைய தினமும் ஒரு போலி தங்கம் சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. ஆலந்தூர்: சூளை அங்காளம்மன் தெருவில் கடந்த 42 ஆண்டுகளாக அடகு கடை வைத்து நடத்தி வருகிறார் 58 வயது சந்திலால்.. இவரது கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க நபர் வந்துள்ளார்..
12 கிராம் எடை கொண்ட ஜிமிக்கி கம்மலை அடமானம் வைத்து ரூ.82,000 ரூபாயை பெற்று கொண்டு போயிருக்கிறார்.. அவர் சென்ற பிறகுதான், அந்த நகையை சந்திலால் எடுத்து பார்த்துள்ளார், அப்போது அது போலி தங்க நகை என்று தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த சந்திலால் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, மோசடியாக பணம் பெற்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கவரிங் நகைகளுக்கு எகிறும் மவுசு
கவரிங் நகைகள் திருடப்படுவதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.. செயின்கள், மோதிரங்கள் போன்ற கவரிங் நகைகள் அதிக விலை கொண்டவை.. அதிலும் சில நகைகள் கிலோவுக்கு லட்சக்கணக்கான மதிப்பில் இருக்கும். அதனால் குற்றவாளிகள் இதனை திருடி, விரைவில் விற்று லாபத்தை சம்பாதிக்க பார்க்கிறார்களாம்.
பல நேரங்களில் கவரிங் நகைகள் கொண்டு செல்லும் போது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை... வாகனங்களில் அலட்சியமாக வைப்பது, கடைகளில் பாதுகாப்பு பணியாளர்கள் இல்லாமை, முக்கிய சிசிடிவி கேமராக்கள் கடைகளில் வைக்காதது போன்றவை இதுபோன்ற திருட்டுகளுக்கு துணை நிற்பதாக கூறுகிறார்கள்.
கவரிங் நகைகளை வைத்து பணம் பெற்றதும், கவரிங் நகைகளையே கொள்ளை அடித்து சென்றதும் என ஒரே நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் மக்களை கலங்கடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications