திருமலா பால் நிறுவன மேலாளர் கொலையா? தற்கொலையா? விசாரணை வளையத்தில் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன்!
சென்னை: திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொலினேனி தற்கொலை விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. கைகள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் நவீன் பொலினேனி மீட்கப்பட்டதாக கூறப்படுவதோடு, விசாரணை வளையத்திற்குள் காவல்துறை துணை ஆணையர் பாண்டியராஜன் கொண்டு வரப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் பொலினேனி. இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக திருமலா பால் நிறுவனத்தின் நிதி மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நவீன் மீது ரூ.40 கோடி நிதி முறைகேடு புகார் எழுந்துள்ளது. நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்ததாகவும், பணத்தை அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

நவீன் பொலினேனி தற்கொலை
இதன்பின் அந்த நிறுவனம் சார்பாக காவல்துறையில் ஜூலை கடைசி வாரத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் ஜூலை 25ஆம் தேதி கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதன்பின் விசாரணை செய்ய மாதவரம் குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென நவீன் பொலினேனி 2 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டார்.
நவீன் அனுப்பிய மெயில்
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, தனது குடும்பத்தினருக்கும், நிறுவன அதிகாரிகளுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், எனது தவறை உணர்ந்துவிட்டேன். ஏற்கனவே கையாடல் செய்த ரூ.5 கோடியை நிறுவனத்திடம் திரும்ப கொடுத்துவிட்டேன். எனது தற்கொலைக்கு நிறுவனத்தில் பணிபுரியும் 2 உயர் அதிகாரிகளே காரணம். அவர்கள் நான் கையாடல் செய்த பணத்தில் பங்கு கேட்டு மிரட்டினர்.
சந்தேகம்
அதுமட்டுமல்லாமல், தங்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்றல், காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வைப்போம் என்று மிரட்டினார்கள். இதனால் தற்கொலை முடிவு எடுத்துள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கைகள் கட்டப்பட்டதா?
இந்த நிலையில் நவீன் பொலினேனி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ஏனென்றால் உடற்கூராய்வு அறிக்கையில் அவர் 100 சதவிகிதம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நவீன் தற்கொலை செய்த பின் உடல் மீட்கப்பட்டபோது கைகள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாக எஃப் ஐஆரில் கூறப்பட்டிருக்கிறது.
விடுப்பு எடுத்த பாண்டியராஜன்
அதுமட்டுமல்லாமல் நவீன் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் நாற்காலிகளே இல்லை. ஆனால் அங்கிருந்த சிமெண்ட் மூட்டைகள் மீது ஏறி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் நவீன் மீட்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினரிடம் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனிடையே கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் திடீரென விடுப்பு எடுத்துள்ளார்.
விசாரணையில் பாண்டியராஜன்
இந்த நிலையில் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் டிசி பாண்டியராஜன் கொண்டு வரப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாண்டியராஜனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டு திருப்பூர் அருகே மதுக்கடைகளை அகற்ற போராடிய பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர் பாண்டியராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications