தொகுதி மறுவரையறை.. தென் மாநிலங்கள் எதிர்ப்பது ஏன்? திமுக முன்வைக்கும் மாற்று யோசனை என்ன? விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இதற்கு முன்பாக தொகுதி மறுவரையறை என்பது எப்படி மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விவரங்களையும் இதில் யாருக்கும் பாதகம் ஏற்படாமல் இருக்க திமுக முன்வைக்கும் யோசனை என்ன என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

தொகுதி மறுவரையறை என்பது அரசியல் அமைப்பு படி கட்டாயம் ஆகும். ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகும், தொகுதிகளின் எண்ணிக்கை லோக்சபா, சட்டமன்ற தொகுதிகளின் எல்லை ஆகியவற்றை நிர்ணயிக்க தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். அரசியல் அமைப்பு விதிகளின் படி இதற்காக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும். இந்த ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையர், அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் இடம் பெறுவார்கள்.

Delimitation Meeting MK Stalin Chennai

முதல் தொகுதி மறுவரையறை எப்போது நடந்தது

முதல் தொகுதி மறுவரையறை ஆணையம் 1952ல் ஏற்படுத்தப்பட்டது. 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 494 ஆக தொகுதிகள் உயர்த்தப்பட்டன. இரண்டாவது கமிஷன் 1963 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன்படி தொகுதிகள் எண்ணிக்கை 522 ஆக உயர்த்தப்பட்டது. மூன்றாவது ஆணையம் 1973 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு 543 ஆக லோக்சபா தொகுதிகள் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு எமர்ஜென்சி கால கட்டத்தில், அரசியலமைப்பில் 42 வது விதியில் திருத்தம் செய்யப்பட்டது.

இதன்படி, 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை தொகுதிகள் எண்ணிக்கை கூட்டப்படாமல் இருக்கும் வகையில், தொகுதி மறுவரையறை முடக்கப்பட்டது. இதனால், 1981 மற்றும் 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை.

5 மாநிலங்களில் குறைய வாய்ப்பு

அதன்பிறகு வாஜ்பாய் தலைமையில் அமைந்த அரசு, அரசியல் சாசன திருத்தம் செய்தது தான் இதற்கு காரணமாகும். தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், 2026 வரை தொகுதி மறுவரையறையை செய்யாமல் வைக்கும் விதமாக வாஜ்பாய் அரசு திருத்தம் மேற்கொண்டது. இதனால் 2026ம் ஆண்டுக்கு பிறகு எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். இந்த தொகுதி மறுவரையறை என்பது மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி பார்த்தால் தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை என்பது குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் மக்கள்தொகை கட்டுப்படுத்தும் திட்டங்களை இந்த 5 மாநிலங்கள் முறையாக பின்பற்றின. இதனால் இந்த மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது என அச்சம் ஏற்பட்டது.

தேவையின்றி அரசியல்

வடமாநிலங்களில் மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க உள்ளது. இதனால் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை செய்வதை கைவிட வேண்டும் என்பது தென்மாநில அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் அரசியல் செய்யப்படுவதாக மத்தியில் ஆளும் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

கோவையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தென் மாநிலங்களில் ஒருபோதும் தொகுதி எண்ணிக்கை குறையாது என்றார். ஆனால், தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறையாவிட்டாலும் கூட வட மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை உயர்ந்தால் அதுவும் ஒருவகை பிரச்சினை என்பதே தென் மாநில அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் பிரதான விமர்சனமாக உள்ளது. இதற்கு மத்திய அரசு என்ன சொல்லப்போகிறது என்று தெரியவில்லை.

இது தொடர்பாக இன்று கூட்டுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டதில் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

திமுக எம்பி சண்முகம் வலியுறுத்தல்

இதற்கிடையே, தொகுதி மறுவரையறை என்பது நியாயமான முறையில் இருக்க வேண்டும் என்பது திமுகவின் கருத்தாக உள்ளது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க 1971-ம் ஆண்டு மக்கள்தொகை தரவுகள் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக வலியுறுத்தியுள்ளது. ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தில் திமுக எம்பி சண்முகம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அமித்ஷா சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கான எம்பி தொகுதிகள் குறையாது என்று கூறினார். இது, தீர்வுக்கு பதிலாக அதிக குழப்பத்தை உருவாக்குகிறது. சமீபத்திய மக்கள்தொகை தரவுகள் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால், தென்மாநிலங்களின் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

திமுகவின் மாற்று யோசனை என்ன?

லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், அது விகிதாச்சார அடிப்படையில் அமைய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். தொகுதி மறுசீரமைப்புக்கு மக்கள்தொகை தரவுகளை பயன்படுத்துவதாக இருந்தால், 1971-ம் ஆண்டின் மக்கள் தொகை தரவுகளை அடுத்த 25 ஆண்டுகளுக்கு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும்.

மத்திய அரசின் செயல்பாடு குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்திய தென்மாநிலங்களை பழிவாங்கும் வகையில் இருக்கிறது. மத்திய அரசின் இத்தகைய அணுகுமுறை, தொகுதி மறுசீரமைப்பில் தென்மாநிலங்களுக்கு பாதகமாக அமையும்" என்று கூறியுள்ளது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி எண்ணிக்கை குறையாது, பாதகம் இருக்காது என்பது திமுகவின் கருத்தாக உள்ளது.

மத்திய அரசின் முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக இல்லை. மத்திய அரசு தரப்பில் இதுவரை உள்துறை அமைச்சர் அமித்ஷா மட்டுமே இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், "தென் மாநிலங்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறையாது எனவும், விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் தொகுதியே கிடைக்கும்" என்று சொல்லியிருக்கிறார்.

எனினும், விகிதாச்சார அடிப்படை என்பது தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா? அல்லது மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா? என்பதை தெளிவுபடுத்த அரசியல் கட்சிகள் கோருகின்றன. இது தொடர்பாக தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்திலும் கூட கனிமொழி எம்பி விவாதம் நடத்தக்கோரி கூறினார். ஆனால் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+