உங்க நம்பிக்கையை காப்பாற்றுவேன்.. ஸ்டாலினிடம் உறுதி கொடுத்த துணை முதல்வர் உதயநிதி!
சென்னை: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்த முதல்வருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். முதல்வரின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் நிறைவேற்றுவேன், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து அயராது உழைப்பேன் என உறுதி அளித்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, டாக்டர் கோவி.செழியன், ஆவடி சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ள நிலையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். திமுகவினர், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள் அனைவரும் பங்களித்து இருக்கிறார்கள். இதன் இன்னொரு கட்டமாகவே தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரான எனக்குத் துணையாக அல்ல: இந்த நாட்டு மக்களுக்குத் துணையாக அவர் இருக்கப் போகிறார்.
தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டுத் துறையின் மூலமாக இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல உலகின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. விளையாட்டுத் துறை, மிகக் குறுகிய காலத்தில் வீறுகொண்டு எழுந்துள்ளது. நாள்தோறும் விளையாட்டு வீரர்கள் பெற்றுவரும் பரிசுகள், ஒலிம்பிக்கை நோக்கிய நம் மாநிலத்தின் பயணமாக அமைந்துள்ளது. அதேபோல், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களை மிக உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறார். அதன் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் கண்காணித்து அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றிக் காட்டி வருகிறார் அமைச்சர் உதயநிதி.
கழகத்தின் இளைஞரணிச் செயலாளராக இருந்து இளைஞர்களை ஈர்த்தும், அவர்களை திராவிடக் கொள்கை கொண்டோராகக் கூர் தீட்டியும் வருகிறார். அவரது செயல்பாடுகள் கழகத்தின் வளர்ச்சிக்கும். ஆட்சித் திறன் மூலமாகத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே துணை முதலமைச்சர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னிலும் கூடுதலான உழைப்பை அவர் செலுத்திட வேண்டும். திமுகவின் கோடிக்கணக்கான தொண்டர்களின் உள்ளக் கிடக்கையையும் உணர்வையும் புரிந்துகொண்டு, அனைத்துத் தரப்பு தமிழ்ப் பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் செயலாற்றிட வேண்டுமென்று விழைகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். "தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். நம் முதலமைச்சர் அவர்களின் எதிர்பார்ப்பையும் - நம்பிக்கையையும் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக - மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து அயராது உழைப்பேன் என்ற உறுதியோடு பணிகளைத் தொடர்கிறேன். தமிழ்நாடு வெல்லட்டும்!" எனத் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications