சென்னையில் திடீர் மழை.. கோடை வெயிலுக்கு மத்தியில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. சென்னைவாசிகள் குஷி
சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பல இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.
சென்னை: கோடை வெயில் இப்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களிலும் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை இயல்பைக் காட்டிலும் சற்று அதிகமாகப் பெய்ததால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இதனால் மாநிலத்தில் இருக்கும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன.
ஜனவரி மாதம் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வந்தது. அதன் பிறகு பெரும்பாலும் எங்கும் மழை பெய்யவில்லை.

வெப்பம்
எப்போதும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வெப்பம் அதிகரிக்கும். இருப்பினும், இந்தாண்டு பிப். மாதமே வெப்பம் உச்சம் தொட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் அதிகமாகவே காணப்பட்டது. கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பம் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு வெப்பம் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி
இதற்கிடையே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பரவலான பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.. தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்தது.. எழும்பூர், வடபழனி, சாலிகிராமம், கோடம்பாக்கம், கொளத்தூர் பகுதிகளில் அதிகாலை நேரத்திலேயே மிதமான மழை பெய்தது. நகரின் பெரும்பாலான இடங்களில் கணிசமாக மழை பெய்தது. இன்னுமே பல இடங்களில் மழை பெய்து வருகிறது அதேபோல வண்ணாரப்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூர், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

சென்னையில் மழை
வில்லிவாக்கம், அயனாவரம், புரசைவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. வட, தென் மற்றும் மத்திய சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த சில காலமாகவே வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், இந்த கோடை மக்கள் சென்னைவாசிகளுக்கு உற்சாகம் அளிக்கிறது. இன்று காலை வாங்கிங் வர வெளியே வந்தவர்கள், இந்த கோடை மழையால் மகிழ்ச்சியடைந்தனர். திடீரென நகரில் பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல முக்கிய சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். அதிகாலை தொடங்கிய மழை இன்னும் கொட்டி தீர்த்து வருகிறது.

மதுரையில் சாரல் மழை
சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. இதேபோல தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் சாரல் மழை இருந்தது. கோடை வெயில் உயரத் தொடங்கியிருக்கும் சூழலில், சென்னை உட்படப் பல பகுதிகளில் பெய்யும் இந்த மழை வெப்பத்தைத் தணிப்பதாக அமைகிறது.












Click it and Unblock the Notifications