முதல்வர் ஸ்டாலின் கொடுத்து அனுப்பிய மனு.. பிரதமர் மோடியிடம் வைத்த 5 கோரிக்கைகள்.. என்ன மேட்டர்?
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் பெறப்பட்ட கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி உள்ளார். அந்த மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு நடைபயிற்சியின் போது தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தொடர் சிகிச்சையில் மருத்துவமனையில் இருந்து வருகிறார். இருப்பினும், அரசு மற்றும் கட்சி தொடர்பான ஆலோசனைகளை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தே மேற்கொண்டு வருகிறார்.

மருத்துவமனையில் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினை அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வந்துள்ளார். முதல்வர் அவரை சந்திக்க இயலாத நிலையில், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த மனுவை பிரதமரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் முதல்வரை சந்தித்து பேசினார்.
அப்போது, தயாரிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அதிகாரிகள் அளித்து அவரின் ஒப்புதலை பெற்றனர். இந்த சந்திப்பின் போது, கனிமொழி எம்.பி.யும் உடன் இருந்தார். இந்த மனுவை பிரதமரிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்து உள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், "மருத்துவமனையில் இருப்பதால் தமிழகத்துக்கு வரும் பிரதமர் மோடியிடம் வழங்க உள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச்செயலர் மூலம் கொடுத்தனுப்பியுள்ளேன். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் வழங்குவார்" என தெரிவித்திருந்தார்.

தங்கம் தென்னரசு அளித்த மனு
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கிய மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டுக்கான ரூ.2,151 கோடி நிலுவைத் தொகையை, நிபந்தனைகள் இன்றி விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கான ஒப்புதல், நிதி ஒதுக்கீடு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல், நிதியுதவியை விரைந்து வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் பாரம்பரிய மீன்படி உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் உருக்காலைக்கு சொந்தமாக உள்ள பயன்படுத்தப்படாத நிலத்தை, பாதுகாப்பு தொழில் பூங்காவுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி விடுவிப்பு
தமிழ்நாடு அரசால் 2018-ஆம் ஆண்டு முதல் சமக்ரா சிக்ஷா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு தொடர்ந்து செயல்திறனை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைப்பில் தற்போது 43.90 லட்சம் மாணவர்கள், 2.20 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 32,000-க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்கள் உள்ளனர். இந்த அளவிலான மற்றும் முக்கியத்துவமிக்க திட்டத்திற்கு தேவையான நிதிகளை வழங்காமல் இருப்பது, லட்சக்கணக்கான மாணவ மாணவியரின் எதிர்காலத்தை பாதித்து வருகிறது.
பிரதமரிடம் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான நிலுவையிலுள்ள ரூபாய் 2,151.59 கோடி மத்திய அரசின் பங்கை உடனடியாக விடுவிக்கவும், 2025-26ஆம் ஆண்டிற்கான முதல் தவணை நிதியையும் விரைவாக வழங்கிடவும், பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனையாக்காமல் நிதியினை விடுவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்கள்
பத்தாண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள பல முக்கியமான ரயில் பாதை திட்டங்களான திண்டிவனம்-செஞ்சி -திருவண்ணாமலை (70 கி.மீ) இரயில் பாதை, ஈரோடு-பழனி (91 கி.மீ) ரயில் பாதை, அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி (60 கி.மீ) ரயில் பாதை, அத்திப்பட்டு புத்தூர் (88 கி.மீ.) ரயில் பாதை, மகாபலிபுரம் வழியாக சென்னை-கடலூர் (180 கி.மீ) ரயில் பாதை ஆகிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
87 கிமீ நீள திருவனந்தபுரம் கன்னியாகுமரி இரட்டை பாதை பணியினை துரிதப்படுத்திடவும், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ஓசூர் புதிய பாதைக்கு ஒப்புதல் அளித்திடவும், கோயம்புத்தூர்-பல்லடம்-கரூர், கோயம்புத்தூர்-கோபிசெட்டிபாளையம்- பவானி-சேலம், மதுரை- மேலூர்- துவரங்குறிச்சி-விராலிமலை- இனாம்குளத்தூர் மற்றும் மதுரை நகரைச் சுற்றி புறநகர் ரயில் ஆகிய திட்டங்களுக்கு வழித்தட ஆய்வு / விரிவான திட்ட அறிக்கை ஒப்புதல் கோரி விண்ணப்பம்.
கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்
கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரு நகரங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் -34.8 கி.மீ.க்கு ரூ.10,740.49 கோடியிலும் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் -32 கி.மீ.க்கு ரூ.11,368.35 கோடியிலும் கட்டி முடிப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்துள்ளது.
மெட்ரோ ரயில் கொள்கை-2017 இன்படி, ஒன்றிய அரசும் மற்றும்தமிழ்நாடு அரசும், 50:50 சம பங்களிப்பு அடிப்படையில், இரு திட்டங்களையும் இணைந்து செயல்படுத்துவதற்கான, ஒப்புதலையும் நிதியுதவியையும், விரைந்து வழங்கிட, ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை.
மீனவர்களை விடுவிக்க கோரிக்கை
சமீப காலமாக, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள்தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த சிக்கலான பிரச்னைக்கு நிரந்தர தீர்வைக் காண பிரதமர் இதில் தனது நேரடி கவனத்தை செலுத்தும்படி கேட்டுக்கொண்டார்.
கைது செய்யப்பட்டமீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விரைவில் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் எனக் கோரினார்.
சேலம் உருக்காலையின் மிகை நிலங்களை வழங்க கோரிக்கை
2018-19ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை பெருவழிச்சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
1971-1975 காலகட்டத்தில், சேலம் உருக்காலை அமைப்பதற்காக 3973.08 ஏக்கர் நிலங்களை தமிழ்நாடு அரசு வழங்கியது. இதில் 1503.44 ஏக்கர் நிலம் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. சேலம் உருக்காலையில் உள்ள பயன்படுத்தப்படாத நிலத்தைப் பயன்படுத்தி பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலையின் கீழ் சேலத்தில் பாதுகாப்பு தொழில் தொகுப்பினை நிறுவுவதற்குதமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளது.
இவ்விவகாரத்தில் தலையிட்டு, சேலம் உருக்காலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை, பாதுகாப்புத் தொழில் பெருவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறுவுவதற்கு ஏதுவாக திரும்ப வழங்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications