ரூ. 525 கோடி மோசடி! தேவநாதன் யாதவின் மயிலாப்பூர் நிதி நிறுவனம், தொலைகாட்சி நிறுவனத்திற்கும் சீல்!
சென்னை: சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்ட இந்திய மக்கள் கல்வி இயக்கத்தின் தலைவரும் பாஜக வேட்பாளருமான தேவநாதனுக்கு சொந்தமான அலுவலகத்தில் குற்றப்பிரிவு போலீஸார் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். அவர் தொடர்புடைய 11 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கும் தொலைகாட்சி நிறுவனத்திற்கும் போலீஸார் சீல் வைத்தனர்.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தின் தலைவராக உள்ளவர் தேவநாதன். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என கூறப்பட்டதாம். ஆனால் சொன்னபடி வட்டி வழங்கப்படவில்லையாம். இந்த வட்டி பணமான ரூ 50 கோடியை பல முறை கேட்டும் நிதி நிறுவனம் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

அது போல் அசல் பணத்தையாவது கொடுங்கள் என கேட்ட போது நிறுவனம் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் கொடுக்கப்படவில்லை. இதனால் முதலீட்டாளர்கள் போலீஸில் புகார் அளித்தனர். முதலீடு செய்த பணம் ரூ 525 கோடியை ஏமாற்றியதாக புகாரின் கீழ் தேவநாதன் திருச்சியில் வைத்து கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சென்னை குற்ற பொருளாதார பிரிவு போலீஸார் குணசீலன், மகிமைநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதன் உள்பட 3 பேரின் அலுவலகங்கள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஆகஸ்ட் 18 இன்றைய தினம் சோதனை நடத்தி வருகிறார்கள். தேவநாதன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு சொந்தமான 12 இடங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
இதில் தேவநாதன் அலுவலகத்தில் ரூ 4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள் சிக்கின. இதையடுத்து மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் தேவநாதனுக்கு சொந்தமான டிவி சேனல் அலுவலகத்திற்கும் போலீஸார் சீல் வைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று தேவநாதனிடம் 8 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ், பாஜக ஆதரவாளர் ஆவார். இவர் டிவி சேனலையும் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் தலைவராகவும் தேவநாதன் இருந்து வருகிறார். 1872 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களில் பலர் தங்களுக்கு கிடைத்த பணப்பலன்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாக தெரிகிறது. முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி ரூ 50 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அது போல் ரூ 525 கோடி வரையிலான வைப்பு தொகையை திரும்ப தர நிதி நிறுவனம் மறுப்பதாகவும் முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.
நிதி நிறுவனம் அளித்த 150 காசோலைகள் பவுன்ஸ் ஆகி வங்கியிலிருந்து திரும்பிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள். இது தொடர்பாக லோக்சபா தேர்தல் நேரத்திலேயே தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த மோசடி தொடர்பாக கடந்த 6ஆம் தேதி மயிலாப்பூர் நிதி நிறுனம் அருகே 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சென்னை குற்ற பொருளாதார பிரிவு போலீஸார் தேவநாதன் யாதவ்வை திருச்சியில் வைத்து ஆகஸ்ட் 13 கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications