பெண் தொழிலாளர்களிடம் கை குலுக்காத முதல்வர் விஜய்.. சரமாரியாக எழும் கேள்விகள்!
சென்னை: சென்னை பெரம்பூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்திருந்த முதல்வர் விஜய், பெண் தொழிலாளர்கள் கை குலுக்க முன் வந்தபோது, கை கொடுக்காமல் மறுத்துவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. சினிமா நட்சத்திரங்களாக இருந்தால் இந்நேரம் கை குலுக்கியிருப்பார் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த விஜய், முதலமைச்சராக தேர்வான பின்னர் இன்றுதான் முதல் முறையாக பெரம்பூர் சென்றிருக்கிறார். அவருக்கு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்திருக்கின்றனர்.

இன்று புதுப்பிக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த அவர், பொதுமக்கள் தங்கள் குறைகளை எளிதாக தெரிவிக்க அலுவலக வளாகத்தில் புதிய இ சேவை மையத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் தொகுதி மக்களுக்காக பிரத்யேக செயலியையும் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தவெக அரசின் புதிய குடும்ப அட்டை விநியோகத்தை தொடங்கி வைத்த அவர், முதற்கட்டமாக 10 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டையை வழங்கியிருந்தார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். அதேபோல, மாநகர போக்குவரத்து கழகத்தின் மின்சார பேருந்து சார்ஜிங் பணிமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை சூழந்த பெண் பணியாளர்கள், குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
அப்போது ஒரு பெண் பணியாளர், விஜய்யிடம் கை குலுக்க முயன்றார். ஆனால், விஜய் கை கொடுக்கவில்லை என்று விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இது தொடர்பாக சோஷயில் மீடியாக்களில் வீடியோக்கள் ஷேராகி, விஜய் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் கை கொடுத்தால்.. அவர்களுடன் கை குலுக்குவார்! ஆனால் தொழிலாளர்களிடையே கை குலுக்க மாட்டாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications