தருமபுரி சவுமியா.. நூலிழையில் மிஸ்ஸான சான்ஸ்.. அதைவிடுங்க, இனிமே பாமக ஓயாது! டாக்டர் ராமதாஸ் அதிரடி
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் நலனுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் முன்வைத்து மக்களவைத் தேர்தலில் களமிறங்கி போராடிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதனால், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தருமபுரி: இதில், தருமபுரியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி் பெற்றுள்ளார். முன்னதாக, இதே தொகுதியில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி போட்டியிட்டிருக்கிறார்.. இவர் காலை முதலே முன்னிலை வகித்து வந்து, திமுகவுக்கே டஃப் தந்தார். இதனால் பாமக தொண்டர்கள் பெரும் உற்சாகத்துக்கு ஆளானார்கள.. ஆனாலும், சவுமியா அன்புமணி இறுதி சுற்றுகளில் தன்னுடைய வெற்றி வாய்ப்பை இழந்தார்..
இந்நிலையில், தேர்தல் முடிவுகளையடுத்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார். இதற்காக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளர்.
சவுமியா: அதில், "தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் நலனுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் முன்வைத்து மக்களவைத் தேர்தலில் களமிறங்கி போராடிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் களத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை நன்றாக பார்க்க முடிந்தது. ஆனாலும், ஆளும் கூட்டணியே அனைத்து இடங்களிலும் வென்றுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
ஆதரவு நம்பிக்கை: ஆனாலும், ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். மக்களவைத் தேர்தலில் அவர்கள் அளித்த தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி தலைவணங்கி ஏற்கிறது. அவர்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்.
தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்து மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுவதை பாட்டாளி மக்கள் கட்சி அதன் முதன்மைக் கடமையாகக் கொண்டிருக்கிறது. அதே நிலை தொடரும். இனிவரும் காலங்களிலும் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் பா.ம.க. ஓயாது.
வாழ்த்துக்கள்: மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், அந்தப் பணியில் அவர்களுக்கு துணை நின்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களவைத் தேர்தலில் பா.ம.க. இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications