வாய்விட்டே கேட்ட அன்புமணி.. ஸ்டாலின் தந்த மெசேஜ்.. டக்டக்குனு மாறிப்போன "சீன்கள்".. யாரந்த ஆபீசர்ஸ்
சென்னை: பாமக தலைவர், முதல்வர் ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்து பேசினார் இல்லையா? அதற்கு பிறகு நடந்த விவகாரம் குறித்து, ஒரு ஸ்பெஷல் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த முறை திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே, பாமக ஒருவிதமான மென்மைப்போக்கை கடைப்பிடித்து வருகிறது.. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் சரி, தலைவர் அன்புமணியும் சரி, திமுகவை அவ்வளவாக விமர்சிக்காமலேயே இருந்து வருகிறார்கள்.

ஒருவேளை, வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் காரணமாக, திமுகவிடம் இவ்வாறான இணக்கமான போக்கை, பாமக கையில் எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
தம்பி ஸ்டாலின்: அதுமட்டுமல்ல, கடந்த வருடம் பாமக நடத்திய அவசர செயற்குழுக் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசும்போது, "தம்பி ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வெற்றி பெறத் தேவையான தேவையான புள்ளி விவரங்கள் அறிக்கையை ஒரே வாரத்தில் கூட தயார் செய்ய முடியும்" என்று கனத்த நம்பிக்கையுடன் பேசியிருந்ததையும் நாம் இங்கு நினைவில் கூறவேண்டியுள்ளது.
ரயில் மறியல்: இதற்கு பிறகு, இது தொடர்பாக பாமக முன்னெடுத்த ரயில் மறியல் போராட்டமாகட்டும், கையெழுத்து இயக்கமாகட்டும், எதிர்பார்த்த பலனை அக்கட்சிக்கு பெற்றுத்தரவில்லை. இதற்குபிறகுதான், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி, தன்னுடைய பிறந்தநாளின்போது நேரடியாகவே கோட்டைக்குச் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார்.. அப்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில், வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அந்த சந்திப்பின்போது வலியுறுத்தியிருக்கிறார் அன்புமணி. ஆனால், இதற்கு எந்த உத்தரவாதத்தையும், ஸ்டாலின் அப்போது அன்புமணியிடம் தரவில்லையாம்..
அதிகாரிகள் அட்வைஸ்: சந்திப்பு நடந்த அன்றைய தினம் அதாவது 9-ந்தேதி மதியம், பாமகவின் கோரிக்கை குறித்து உயரதிகாரிகளிடம் விவாதித்துள்ளார் ஸ்டாலின். அதற்கு அதிகாரிகள், பாமகவின் கோரிக்கையின் மீது கவனம் வைக்கவேண்டாம் என்கிற ரீதியில் நெகட்டிவ்வாக சொல்லியுள்ளனர் அதிகாரிகள்.
அதற்கு ஸ்டாலின், "இடஒதுக்கீட்டினை அமல்படுத்துவது தானே சமூக நீதியாகும்? வன்னியர் சமூகம் உள்ளிட்ட 108 சாதிகளை எம்பிசி (MBC) என வகைப்படுத்தி அவர்களுக்கு 20 % இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர் தலைவர் கலைஞர்... இப்போதைக்கு அதே ரீதியிலான அவர்களின் தனி ஒதுக்கீட்டை புறந்தள்ளுவது சரியில்லையே" என்று கேள்வி எழுப்பினாராம்.
நெகட்டிவ் அட்வைஸ்: ஆனால், இதற்கு சில அதிகாரிகள், "இவர்களுக்கு கொடுத்தால், ஒவ்வொரு சமூகமும் இடஒதுக்கீடு கேட்டால் என்ன செய்ய முடியும்? அதை அரசால் சமாளிக்கமுடியுமா? தேர்தல் நெருங்கும் நேரத்தில் மற்ற சமூகத்தினரின் அதிருப்தி தேவையில்லாமல் உருவாகும்" என்று நெகட்டிவ்வாகவே அட்வைஸ் செய்தார்களாம்.. எனவேதான், அன்புமணியின் கோரிக்கையை அப்போதைக்கு கிடப்பில் வைத்துவிட்டாராம் ஸ்டாலின்.
அதுமட்டுமல்ல, இது குறித்து, "இப்போதைக்கு சட்டம் கொண்டு வரப்படவில்லைன்னு யோசிக்காதீங்க, பிறகு பரிசீலிக்கிறேன்" என்று டாக்டர் அன்புமணிக்கு, தகவல் அனுப்பியுள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்.. எனினும், இதற்கு பாமகவின் ரியாக்ஷன் என்னவாக இருக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications