விஜய் மீது தனிப்பட்ட முறையில் எந்த வன்மமும் இல்லை.. திருமாவளவன் பேட்டியை முழுமையாக கவனித்தீர்களா?
சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீது தனிப்பட்ட முறையில் எந்த வன்மமும் இல்லை என்றும் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை எனக்கு என்ன இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவும் இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். திமுக ஆட்சியில் பிரச்சினைகளுக்கு நாங்கள் குரல் கொடுத்தாலும் கூட இந்த கூட்டணியை சிதைய விடாமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு என்றும் திருமாவளவன் கூறினார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடந்தது. அந்த விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய், தன்னுடைய கொள்கை என்ன, அரசியல் எதிரிகள் யார், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு, கட்சியின் செயல்திட்டங்கள் என்ன என்பது பற்றி விவரித்தார். சுமார் 45 நிமிடம் பேசிய விஜய், பாஜகவை பொது எதிரி என்றும் (மறைமுகமாக), திமுவை அரசியல் எதிரி என்றும் நேரடியாக தாக்கி பேசினார். திமுகவை பாசிசம் பாயாசம் என்றும், ஊழல் மலிந்த திராவிட மாடல் ஆட்சி என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு திமுகவினர் கடந்த ஒரு வாரமாக கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, காங்கிரஸ் ஆகியவை அடுத்தடுத்த நாளில் விஜய் மற்றும் அவரது தவெக கட்சியை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தன. இதில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கைக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்வினையாற்றினார்கள். திருமாவளவன் விஜய் பற்றி செயதியாளர் சந்திப்பில் கூறும் போது, "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் நடிகர் விஜயிடம் இருந்து தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அவரது தொண்டர்கள் ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், அவர் பல்வேறு வியூகங்களுக்கு பதில் சொல்வதில் குறியாக இருந்தார். தனக்கு எதிரான விமர்சனங்களை குறித்து விளக்கம் சொல்வதிலேயே அதிக நேரத்தை எடுத்துக்கொண்டார்.
நண்பர்கள் யார் யார் என்று அடையாளப்படுத்துவதை விட, எதிரிகள் யார் என அடையாளம் காட்டுவதிலேயே விஜய் ஆர்வம் காட்டினார். பிளவுவாத சக்திகள் முதலாவது எதிரி என்றும், ஊழல் சக்திகள் இரண்டாவது எதிரி என்றும கூறுகிறார். பிளவுவாத சக்திகள் என்று கூறுகிற பொழுது வெளிப்படையாக அந்த கட்சி பற்றி கூறவில்லை. குறிப்பிட்ட இந்த அமைப்புதான், கட்சிதான் என்று விஜய் தனது பேச்சின் போது அடையாளம் காட்டவில்லை.
அதேபோல் பாசிஸ்டுகள் என்று திமுகவை மட்டும் கூறுகிறாரா அல்லது திமுக கூட்டணியில் உள்ள 28 கட்சிகளைக் கூறுகிறாரா என்று தெரியவில்லை. பாசிச எதிர்ப்பு தேவை இல்லை என்று கூறுவதால் பாஜக எதிர்ப்பு தேவை இல்லை என்று நினைக்கிறாரா? பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பதை அவர் உரை முழுவதும் நமக்கு உணர்த்துகிறது. அவரது உரை முழுவதும் திமுக எதிர்ப்பு நெடி காட்டுகிறது.திராவிட மாடல் ஆட்சியை எதிர்க்கிறார். குடும்ப ஆட்சி என்று கருணாநிதி குடும்பத்தை எதிர்க்கிறார். இது ஒரு புதிய அரசியல் நிலைப்பாடு அல்ல. தமிழகத்தில் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் தான். இது மக்களிடத்தில் எடுபடவில்லை என்பது தான் வரலாறு உணர்த்துகிறது. உண்மையில் அதிகாரப் பகிர்வை அளிப்பதாக இருந்தால், இதனை மறைமுக செயல்திட்டமாகக் கையாண்டிருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
இதனிடையே திருமாவளவன் அளித்த இந்த பேட்டிக்கு பின்னர், திமுகவின் ஊது குழலாக அவர் மாறிவிட்டதாக விஜய் ரசிர்கள் விமர்சித்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக திருமாவளவனை விமர்சிப்பது அதிகமாக உள்ளது. இந்நிலையில் பிரபல தமிழ் செய்தி ஊடகத்திற்கு திருமாவளவன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும் போது, "நடிகர் விஜய்யால் எடுத்த எடுப்பிலேயே 30 சதவீத வாக்குகளை வாங்கிவிட முடியுமா? எம்ஜிஆர் கட்சி தொடங்கும் முன்பே அவர் திமுகவைச் சேர்ந்தவர் ஆவார். எம்ஜிஆர் தனி கட்சி ஆரம்பிக்கும் முன்பே தேர்தல் அனுபவத்துடன் களம் இறங்கினார். எம்ஜிஆருக்கு பின்னால் வந்த எந்த நடிக்கருக்கும் அவருக்கு இருந்த பின்னணி இல்லை. எம்ஜிஆரின் தொடர்ச்சியாகத்தான் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்துள்ளார். விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விஷயங்களை சுட்டிக் காட்ட வேண்டியதிருந்ததால் சுட்டிக் காட்டியிருந்தேன். விஜய் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வன்மமும் கிடையாது.
விசிகவை திமுக கூட்டணியில் உள்ள கட்சியாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். திமுக கூட்டணி என்பது தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியாகும். இந்த கூட்டணியை உருவாக்கியதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு பங்கு உண்டு. அந்த கூட்டணியின் நோக்கத்தை நோக்கி பயணிப்பதுதான் விசிகவின் தேவையாக இருக்க முடியும். அந்த கூட்டணியை சிதைக்க வேண்டும் என்று நான் ஏன் முடிவு செய்ய வேண்டும்? அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டிய தேவை எனக்கு என்ன இருக்கிறது? அதற்கான நெருக்கடி எனக்கு எதுவுமே இங்கு இல்லை.
கூட்டணியில் இருந்தாலும்,பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கடுமையாக கண்டிக்கிறோம். நாங்கள் எதுவும் செய்வதில்லை என்று சிலர் தகவல்களை பரப்புகிறார்கள். அது எங்கள் மீதான காழ்ப்புணர்ச்சியாகும். திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்சினைகளை நாங்கள் தொட்டிருக்கிறோம். உள்ளே இருந்து எங்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தாலும் கூட இந்த கூட்டணியை சிதைய விடாமல் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு" என்றார்.












Click it and Unblock the Notifications