நறுக்! பாஜகவுக்கு சூடு! ஸ்டாலின் ட்வீட்டில் இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா? வார்த்தைக்கு அழுத்தம் வேற!
சென்னை: முதல்வர் ஸ்டாலின், 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை' பற்றி பதிவிட்டுள்ள ட்வீட்டில் பாஜகவை விமர்சிக்கும் வகையில் மறைமுகமாக குறிப்பிட்டிருந்த 2 விஷயங்கள் கவனிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை அமையும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

சென்னை கிண்டி கிங்ஸ் ஆய்வு மைய வளாகத்தில் 4.89 ஏக்கர் பரப்பளவில் 230 கோடி ரூபாய் செலவில் புதிய பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம் மற்றும் ஆறு மேல் தளங்களுடன், 6 லட்சம் சதுர அடி பரப்பளவில், 7 மாடிகள் கொண்ட 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை: இருதயவியல், நரம்பியல், புற்றுநோய், இரைப்பை குடல், ஆகியவற்றில் நிபுணர்கள் உட்பட 12 சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை பிரிவுகள் சிறுநீரகம், வாஸ்குலர், மூளை வாஸ்குலர் கதிரியக்கவியல் என பல்வேறு பிரிவுகளுடன் சென்னையில் முக்கியமான சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹெல்த்கேர் மருத்துவமனையாக அமைந்துள்ளது கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.
இந்த மருத்துவமனை ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை திறந்து வைக்க ஏற்கெனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி நேரில் சென்று அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால் குடியரசுத் தலைவர் செரிபியாவுக்கு சென்றுவிட்டதால் மருத்துவமனை திறப்பு தேதி தள்ளிப்போனது.
குடியரசுத் தலைவர் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், ஜூன் 15ஆம் தேதி மருத்துவமனையை திறந்துவைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனை திறப்பு குறித்த எந்தவித பதிலும் குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை. எனவே இந்த மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
ஸ்டாலின் சிலேடை ட்வீட்: இந்நிலையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ள மருத்துவமனையைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதோடு ஆங்கிலத்தில், "We are delivering on our aims" என்றும் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். மதுரை எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் தற்போதைய நிலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலேயே முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு வெளியிட்டது. ரூ.1,264 கோடி மதிப்பில் சுமார் 200 ஏக்கரில் மதுரை தோப்பூரில் மருத்துவமனை அமையும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு, நான்கரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. இதுவரை மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

AIIMS - AIMS: இதற்கிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது படித்து வருகின்றனர். ஆனால், எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகள் கடந்து, அடிக்கல் நாட்டி நான்கரை ஆண்டுகள் கடந்தும் மதுரை எய்ம்ஸ் கட்டிடமே இன்னும் கட்டப்படாத நிலையில், அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை' திறப்பு விழா காண்பதாக, முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.
'அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில்' என்ற வாக்கியத்தின் மூலம், மதுரை எய்ம்ஸ் பணிகளை தொடங்காத மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளதோடு, "We are delivering on our aims!" என்று குறிப்பிட்டு சீண்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வரின் இந்த ட்வீட்டை திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications